கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு
( காரையூர் வேதசகா)
கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு இடம்பெற்றது.
காரைதீவு தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 சிவ கானங்கள் அடங்கிய இறுவெட்டு நேற்று பகல் 1 மணிக்கு ஆலய சந்நிதானத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
நெறியாள்கை செய்த வி.ரி.சகாதேவராஜா பாடலாக்கம் செய்த இ. கோபாலசிங்கம் ஆகியோருக்கு ஆலய அறங்காவலர் சபையினர் பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சி. கிருபாகர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
ஆயிரமாயிரம் பக்தர்கள் முன்னிலையில் இவ் வெளியீடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






