கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான   வசந்த பியதிஸ்ஸ  வழிகாட்டலில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்று திங்கட்கிழமை(12) கல்முனை கடற்கரை பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க   தலைமையிலான இக்குழுவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பொறியாளர் எம். துளசிதாசன் மற்றும் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீத், தேசிய  மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டு கடலரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள பிரதேசம் மற்றும் கல்முனைக்குடியில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ஃபலா பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு களப் பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

மேலும், இவ் விஜயத்தின் போது பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, கடலரிப்பை நிலையான அடிப்படையில் தடுப்பதற்கு மேலும் கற்களை போடும் வேலைத்திட்டத்தை விரைவில் மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.