மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா .
இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான கலாபூஷணம் விருதளிக்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரிமாளிகையில் இடம்பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்திலிருந்து இவ்வாண்டு இவ் விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழர். பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்
எழில் கொஞ்சும் இலங்கைத் தாயவள் தன் புகழையும் பெருமையையும் கீர்த்தியையும் உலகிற்கு சான்றுபடுத்திக் கொள்ள தகைமைசால் புதல்வர்களை பிரசவிக்கின்றாள். அந்த தாயின் தவப்புதல்வர்களில் ஒரு முத்து கிழக்கிலங்கையின் கல்விக்கலங்கரை தீபமாகவும் பல்துறைக் கலைஞராகவும் மிளிர்கின்றார் பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்.
படைப்பிலக்கியத் தடங்களில் தனியிடம் பதித்தவர் என்று பலரும் கொண்டாடும் வண்ணமாக தன்னைச் செதுக்கிக் கொண்ட சிற்பி இவர்.மீன்பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரிற்கு தென்கிழக்கே சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் செந்நெற் கழனிகள் சூழ பசுமை படர்ந்த பழம்பெரும் கிராமமே சொறிக்கல்முனையாகும்.இங்கு கத்தோலிக்க பாரம்பரியமிக்க யுவான்பிள்ளை கிறகோரி, செபதேயு றோஸ்மேரி தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக 24.10.1963ல் பிறந்தார்வர்தான் டேவிட் எனும் இயற்பெயர் கொண்ட இலக்கிய வித்தகர் பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் , கல்லூரி நிலைக் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவிலும் கற்றுத் தேறியவர்.
இவரது பன்முக ஆற்றல்களை அன்றே இனங்கண்டு கொண்ட கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் அதிபர்திலகம் அருட்சகோதரர் முனைவர் எஸ்.ஏ.ஐ.மத்தியு இக் கல்லூரியின்யின் நாடகத்துறைக்காக இவரை அதிகம் பயன்படுத்திக் கொண்டார்.
இலங்கை ஆசிரிய சேவைக்கு போட்டிப்பரீட்சை மூலமாக ஆசிரியராக 07.08.1988 இல்நியமனம் பெற்றார். 1991/92 ஆம் கல்வியாண்டில் யாழ் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விவசாய பாட விசேட பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியானதுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்துறையில்முதுமாணிப் பட்டம் பெற்றார். தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் அதி விசேட ( மெரிட் ) சித்தி பெற்றதுடன். ஆசிரியராகவும் அதிபராகவும் பிறந்தமண்ணில் அரும்பணிகளாற்றினார்.
இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை கல்வி வலயத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராக சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் அர்ப்பணிப்பான சேவைகளாற்றி பாடத்திலும் பாடஇணைச் செயற்பாடுகளிலும் உயர்ந்த பெறுபேறுகள் கிடைக்க வழிவகை செய்தார். இவரது காலப்பகுதியில் இவ் வலயப் பாடசாலைகள் வில்லுப்பாட்டு, இலக்கிய நாடகம், பேச்சுப்போட்டி, விவாதம் போன்றவற்றில் பல சாதனைகள் புரிந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.
இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று முதலாம் தர அதிபராகி கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தை சுமார் எட்டு வருடங்கள் வழி நடாத்தி பல சாதனைகள் ஏற்படுத்தினார்.
2014, 2015 ,2016 ஆம் ஆண்டுகளில் கல்வியமைச்சினால் மிகச்சிறந்த அதிபருக்கான ‘ குரு பிரதீப பிரபா ‘ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
2019இல் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று காரைதீவுக் கோட்டத்தை கல்வியிலும் , இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளிலும் உயர் நிலையடையச் செய்ததுடன் கல்விப் புலத்தில் ஆசிரியராக ஆசிரிய ஆலோசகராக அதிபராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக என பல நடிபங்குகளை ஏற்று முப்பத்தாறு வருடகாலம் உயர்ந்த சேவைகளையாற்றி 24.10.2023 உடன் ஓய்வு பெற்றார்.
பைந்தமிழ்க் குமரன் எனும் புனை பெயரில் எழுதி வரும் இக் கல்விமானை 01.10.2020 இல் உலகத் தொடர்பு தின விழாவில் தொண்டன் சஞ்சிகை சார்பில் ஆயர் அதிவண ஜோசப் பொன்னையா ஆண்டகை பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 2015ம் ஆண்டு ‘கானல் வசந்தங்கள் ‘ எனும் பெயரில் வெளிவந்தது. இந்நூலுக்கு 2016ல் கொடகே சாகித்ய விருதும் கிடைத்தது. 21.10.2017இல் ” மண்மாதா ” எனும் கவிதை நூலை பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களது கனதியான அணிந்துரையுடன் வெளியிட்டார். கடந்த 2023ல் கறையான் தின்ற கனவுகள் எனும் சிறுகதைத் தொகுதியையும் படைத்தளித்தார்.
கடந்த 20.08.2024 அன்று கிறீஸ்த்தவ விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வில் “தர்மபிரபாஸ்வர” எனும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரே எழுதி நெறியாள்கை,ஒப்பனை,பின்னணிஇசை வழங்கி மேடையேற்றிய ‘அக்கினியாத்திரை’ நாடகம் 2018ல் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுபல பரிசுகளைஅள்ளிவந்தது. 2018.03.25
அன்றுமலையககல்விகலாசார சங்கம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு விழாவில் தேசாபிமானிகல்வித்தீபம் விருது வழங்கி கொரவித்தது. யாகம்,வேள்வி,விடியலும் சுடும், கோபுரங்கள் போன்ற இவரது நாடகங்கள் நாட்டின் பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றவையாகும். 25.03.2018ல் திர இருதயநாதர் தேவாலய முன்றலில் தாகமாயிருக்கிறேன் எனும் மகுடத்தில் மாபரன் யேசுவின் பாஸ்க்கா நாடகத்தை சுமார் 65ற்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு மேடையளிக்கை செய்திருந்தார்.
ஆவ்வாறே 14.04.2019ல் மனிதம் பூத்த கல்வாரி பாஸ்க்கா நாடகத்தையும் வழங்கினார்.வரடா வருடம் சொறிக்கல்முனையில் காட்சிப்படுத்தப்படும் பாஸ்க்கா காட்சிகளில் ஒப்பனையாளராகவும் பின்னணிகளை வழங்கபவராகவம் பணியாற்றுகின்றார்.தற்போது பாடசாலைகளில் கவிதை சிறுகதை மற்றம் நாடக பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி மாணவர்களது படைப்பாற்றலையும் நடிப்பாற்றலையம் மேம்படுத்தி வருகின்றார்.வயது அறுபத்திரெண்டு. 2024ல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “இலக்கிய வித்தகர்”விருது வழங்கி கௌரவித்தது. தற்போதுகல்முனைவடக்கு பிரதேச செயலகம் பாண்டிருப்பு01அருச்சுனர் வீதியில் 243ம் இலக்கத்தில் நிரந்தர வசிப்பிடமாக கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்கின்றார் கல்வியலாளரும் இலக்கியவியலாளருமான இலக்கிய வித்தகர் ஜெ.டேவிட்.
இவருக்கு கல்முனை நெற் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

