பெரியநீலாவணை நெக்ஸ்ட் ஸ்டெப் (NEXT STEP) சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக நேயரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான கண. வரதராஜன் அவர்கள் தமிழக அரசினது அழைப்பின் பேரில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் அயலக தமிழர் நாள் – 2026 மாநாட்டு நிகழ்வுகளில் இலங்கை நாடக நடவடிக்கை குழு (Theatre Action Group – TAG) சார்பில் கலந்து கொள்வதற்கான இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனவரி 11, 12 ஆகிய இரு நாட்களும் முறையே தமிழக இணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் “தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்”என்னும் கருப்பொருளை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஜனவரி 31 வரை தென்னிந்திய பிராந்தியத்தின் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலுள்ள கலை கலாசார பண்பாட்டு மையங்களைத் தரிசித்து அங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து அப்பிரதேச மக்களின் பாரம்பரிய கலைகளை எமது கலைகளுடன் ஒப்பீடு செய்யவுள்ளார்.

குறித்த நாடக நடவடிக்கை குழுவில் வட மாகாணத்தில் இருந்து 10 பேரும் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் நோர்வேயிலிருந்து ஒருவரும் ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து இருவரும் ஆக மொத்தம் 14 பேர் கலந்து கொள்கின்றனர்.