5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்!

(வி.ரி.சகாதேவராஜா)

2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. 

அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை தின வைபவங்கள் நடாத்த பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலே அதிகூடிய உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்தது அம்பாறை மாவட்டமாகும்.

 அங்கு கரையோரப்பிரதேசங்களில் இன்று  பரவலாக ஆழிப்பேரலை தின நினைவு வைபவங்கள் இடம்பெறவிருக்கின்றன.

இலங்கையில் 35ஆயிரம்பேரைக் காவுகொண்ட ஆழிப்பேரலை அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அதிகூடிய 5000பேரைக்காவுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையொட்டி கடலோரமெங்கும் ஆத்மார்த்த அஞ்சலி பிரார்த்தனை செலுத்த பொதுஅமைப்புகள் மற்றும் மக்கள் தயாராகிவருகின்றனர்.

 காரைதீவில் இந்துசமய விருத்திச்சங்கம் ஏற்பாடு செய்த ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காரைதீவுக் கடற்கரையிலுள்ள நினைவுத்தூபி முன்னிலையில் நடைபெறவுள்ளது. காரைதீவில் 823 பேர் சுனாமியில் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை 1ஆம் 2ஆம் 3ஆம் பிரிவுகளில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்காய் கட்டியெழுப்பப்பட்டுள்ள மாமாங்க நினைவுத்தூபி முன்றலில் பிரதான நிகழ்வு நடைபெறவுள்ளது. இப்பகுதியில் 326பேர் இப்பேரலைக்கு பலியானவர்களாவர். அவர்களது பெயர்விபரம் இத்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்முனை சைனிங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினர் ஏனைய பொது அமைப்புகளுடன் இணைந்து  தூபி முன்னிலையில்  விசேட ஆத்மார்த்த பூஜை மற்றும் ஆத்மார்த்த ஒளிதீபம் ஏற்றுவதோடு அஞ்சலி நிகழ்வையும் இன்று நடாத்தவுள்ளது. பாண்டிருப்பு சுனாமி நினைவுத்தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.