இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அளித்த உதவிகளுக்கு இதன்போது ஜனாதிபதி அநுர மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி, இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தனது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் 450 மில்லியன் டொலர் சலுகைப் பொதியை இலங்கைக்கு வழங்குவதாகவும், தேவைப்படும் வேறு எந்த உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு தெரிவித்தார். இந்த தனித்துவமான ஒத்துழைப்பு இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், சுகாதாரம், வலுசக்தி மற்றும் வீடமைப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்றும் இந்த சந்திப்பின் போது இந்திய தரப்பில் அறிவிக்கப்பட்டது.




