தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம்!
( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏற்பாட்டில் தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திற்கு இந்திய தமிழ் நாட்டு உதவியில் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
தித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவியாக வழங்கும் பொருட்டு இந்திய தமிழ் நாட்டு மக்களால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலர் உணவுப் பொருட்கள் தற்போது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இவற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தொகுதியை அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்போது இம்மாகாணத்தில் நிலவும் மழையிலும் கூடிய கால நிலையையும் பொருட்படுத்தாமல் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இடம் பெற்று வருகின்றது.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் ஆலோசனையின் பேரில் அங்கு சென்றுள்ள மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.முனாஸிர் தலைமையிலான மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 50 மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் அம்பாரை மாவட்டத்திற்குக் கிடைக்கவுள்ளதாகவும்
இதில் 100 டொன் சீனி 100 டொன் பருப்பு 2.5 டொன் பால்மா பக்கட்கள் பெட்ஷீட்கள் மற்றும் ஆடைகள் உட்பட மேலும் சில அத்தியாவசிய பொருட்களும் அடங்கியுள்ளதாக அங்கிருக்கும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.முனாஸிர் தெரிவித்தார்.
இதேவேளை இப்பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் இலங்கை கடற்படையினர் உதவி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிவாரணப் பொருட்களை சுமந்த இக்கப்பல் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியின் பயனாக நேற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





