மட்டு அம்பாறையில் மின் இணைப்பை சீர் செய்யும் பணிகள் மும்முரம்
அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குறித்த கோபுரம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கான மின்சாரம் கடந்த ஐந்து நாட்களாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரன்தம்மே, மஹியங்கனை 132kV உயர் மின்னழுத்த இனைப்பின், 15ஆவது கோபுரமே இதுவாகும்.
இலங்கை மின்சார சபையின், 132kV உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற கோபுரம் மற்றும் மின் கம்பிகள் வெள்ளத்தால் சேதமடைந்ததால், அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, சிரமங்களுக்கு மத்தியில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சேதமடைந்த மின் பரிமாற்ற பாதையை சரிசெய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்துள்ளது.
தற்போது அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் அத்தியாவசிய நிறுவனங்களுக்கான மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சில பகுதிகளுக்கு தற்காலிகமாக சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இருப்பினும், சில பகுதிகளில் தொடர்ந்து முழுமையான மின் தடை நிலவுகிறது.
சேதமடைந்த கோபுரத்திற்குப் பதிலாக புதிய கோபுரம் ஒன்றின் கட்டுமானம் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நிறைவுசெய்து, அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளுக்கான மின் விநியோகத்தை ஒரு வார காலத்தினுள் முழுமையாக சீர்செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
2025-12-02




