இலங்கை நாதஸ்வரசக்கரவர்த்தி பாலமுருகனுக்கு அமெரிக்காவில் இரு விருதுகள் 

( வி.ரி. சகாதேவராஜா)

உலகப் புகழ் பெற்ற ஈழிசை சித்தன், தெய்வீக நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள்    விருதுகளாக பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன.

Senate Proclamation – நியூயார்க் மாநில செனட்டர் ஜெரமி கூனியின் அலுவலகத்திலிருந்தும், 

Certificate of Special Recognition – அமெரிக்க காங்கிரஸ்மேன் ஜோ மொரெல்லே அவர்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்றன.

தமிழ் நாதஸ்வரத்திற்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம் மற்றும் நாதஸ்வர வித்துவான் பாலகுமாரனுக்கு கிடைத்த உயரிய விருது என்பன இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளன.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இலங்கை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவ சங்கர் ஜீ வாழ்த்து தெரிவிக்கையில்..

இலங்கையின் தெய்வீக நாதஸ்வர நாதம் அமெரிக்க மேடையிலும் ஒலித்த தருணம்; எங்களுக்கு கிடைத்த பெருமை!  தமிழ் இசையின் இதயத் துடிப்பான நாதஸ்வர ஒலி இன்று அமெரிக்க அரசின் செவிகளிலும் ஒலித்திருக்கிறது.

இவை வெறும் விருதுகள் அல்ல, இவை இன்று நியூயார்க் மாநிலத்திலும், அமெரிக்க தேசிய மட்டத்திலும், அதன் வரலாற்று ஏட்டில் எம்மண்ணின் மைந்தனின் பெயர் பொறிக்கப்பட்ட தருணம்!

இது நாதஸ்வர கலைக்கான அங்கீகாரம்.

நமது இசை மரபின் ஆழமும், நாதஸ்வரக் கலையின் சிறப்பும், ஒரு கலைஞனின் வாழ்நாள் அர்ப்பணிப்புக்குமாக இணைந்த உயர் அங்கீகாரம் இது.

யாழ் மண்ணில் பிறந்த அந்த நாதம்,இன்று ரொச்செஸ்டர் நகரின் இதயத்திலிருந்து அமெரிக்க அரசின் நெஞ்சைத் தொட்டிருக்கிறது !!

அதுவே இந்த பெருமையின் தூய யதார்த்தம்! 

எல்லை கடந்த உழைப்பும், பண்பாட்டை தாங்கும் தியாகமும் இன்று உலகமெங்கும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

என்றும் என்குரு திருமூலர் பெருமானின் குருவருளும், கதிர்காம கந்தனின் இறையருளும் எங்கள் பாசமிகு பாலமுருகன் அண்ணாவையும் அவர் குழுவினரையும் வழிநடத்தும்.

உங்கள் நாதம் இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து ஒலிக்க என்குரு திருமூலரை வேண்டுகிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.