(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது.
திருகோணமலையில் நிலாவெளி, பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்று பல சுற்றுலா தளங்கள் இருக்கின்றன .
அதில் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டில் திருமலை நகரில் உள்ள கடலில் நடுவே உள்ள சோபஸ் தீவு முக்கிய இடம் பிடிக்கின்றது . முன்பு இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
அண்மை காலமாக அங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாவிகள் கடல் படகு பயணத்தை மேற்கொண்டு அந்த தீவுக்கு சென்று வருகின்றார்கள் .
இவ்வாரம் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 91 /92 புலன அணியினர் அங்கு நேரடியாக சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கடற்பரப்பில் மொத்தமாக 12 தீவுகள் இருக்கின்றன. அதில் மிகப் பெரிய தீவு இந்த சோபர்ஸ் தீவாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக உள்ள ஒரு பெரும் தீவு .இந்த சோபர்ஸ் தீவு 175 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.
பிரிட்டிஷ் நாட்டு இளம் வீரர் 1672ல் இங்கு உயிர்த்தியாகம் செய்தவர் .அவரது பெயர் இந்தத்தீவுக்கு இடப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில் இந்த தீவு அமைந்துள்ளது.
இங்கு ராணுவ தளவாடங்கள் களஞ்சிய அறை கல்லறைகள் பாரிய போர் தளபாடங்கள் அமைந்துள்ளன.
அங்கு ஒல்லாந்தர் போத்துக்கீசர் ஆங்கிலேயர் காலத்து ராணுவ தளங்கள் இன்றும் பழமை குன்றாமல் பேணப்பட்டு வருகின்றது .
சிறந்த உணவகம் அங்கே காணப்படுகின்றது. சுற்றுலாவிகள் சுவையான உணவுகளை இங்கு பெறலாம்.அங்கு மலை உச்சியில் ஏறி நின்று பார்க்கின்ற பொழுது முழு திருமலை நகரத்தையும் பார்க்கலாம் .
20 அடி உயரமான ஏணியில் ஏறி அழகான காட்சிகளை காண்பது இங்கு ஒரு விசேட அம்சமாகும்.
இவ்வாண்டில் இதுவரை இலங்கைக்கு 18 லட்சத்து 78 ஆயிரம் சுற்றுலாவிகள் வருகை தந்திருக்கின்றார்கள்
. நாடெங்கும் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் . இங்கும் தினமும் வருகை தருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


















