போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது  

பாறுக் ஷிஹான்

போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  புற நகர்  பகுதியில் ஐஸ்  போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு  சந்தேக நபர்களை இன்று (20) திங்கட்கிழமை மாலை  சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.

சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது  குறித்த இரு சந்தேக நபர்களும்  கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் 25 வயது  மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன்   சம்மாந்துறை  மலையடிக்கிராமம் 3  பகுதியைச்  சேர்ந்தவர்களாவர்.

 மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம்  இருந்து 1370 மில்லிகிராம்    385 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன்  ஒரு தொகை பணம்  கையடக்கத் தொலைபேசி (03) மோட்டார் சைக்கிள்    என்பன மீட்கப்பட்டிருந்ததுடன்  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த   சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை  மேற்கொண்டு வருகின்றனர்.