suthan.Tns எனும் முகப்புத்தக பதிவில் இருந்து
பள்ளயத்தின் கடைசி நாளில் தொடங்கும் எங்களது அடுத்த ஒரு வருட கால காத்திருப்பு, இடையில் எத்தனை பண்டிகைகள், புது வருட கொண்டாட்டங்கள் வந்து போனாலும் எண்ணங்கள் என்னவோ அந்த புரட்டாதி மாதத்திற்காக காத்திருக்கும்…
கூரைகள் ஒட்டடை தட்டி, வீடுகளுக்கு சுண்ணாம்பு, வேலிகளுக்கு கிடுகுகள் வேய்தல் என பெரும்பாலும் புரட்டாதியில் அமர்க்கள பட தொடங்கியிருக்கும் எங்கள் வீடுகள்..
செல்போன்கள் கூவாத எங்கள் காலத்தில், தூரமாய் போன எங்கள் சொந்தங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து சேர இனி அந்த 18 நாட்கள் ஊரும் களைகட்ட தொடங்கும்….
உண்டியல்கள் சிதற தொடங்கும், சேர்த்து வைத்த காசுகள் கைக்கு வரும், அந்தக் கால சில்வண்டுகள் கையில பிடிக்க முடியாத சின்ராசுகள் தான் அந்தப் 18 நாட்களுக்கு…
வெளியூரிலிருந்து மாமா குடும்பம், சித்தப்பா குடும்பம் வந்திருக்காங்க பெரிய உலை வைக்கணும், ரெண்டு கொத்து பானை, மூணு கொத்து பானை இருக்கா அக்கா என்று பக்கத்து எதிர் வீட்டுக்காரங்க வீட்டுக்கு வருவாங்க, பெரும்பாலும் அவசரத்துக்கு தேவைப்படும் பொருட்கள் அயல் வீடுகளில் பரிமாறப்பட்டன…
கடைசி மூன்று நாட்களுக்கு எங்கள் வீட்டிலும் பெரிய அடுப்பு பெரிய உலை…, வீட்டு வாசல் மணலில் பாய் விரித்து அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா என்று ஒரு பத்து பதினைந்து பேர் சிம்னி விளக்கு ஒளியில் சாப்பாடு….
கல்யாணகால் பூசை நாள் அன்றே மாமா குடும்பத்தோடு வந்துவிடுவார், அதுவரை எங்கள் சுவாமி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் காவடி தூசு தட்டி வெளியே எடுக்கப்படும்.. புதுசா சோடனை வண்ண பேப்பர்கள் மயிலிறகு என காவடி சோடனைக்கு ஒரு நாள்.. மயிலிறகு குட்டி போடும் சோதனைக்காக ஒன்று இரண்டு மயிலிறகு தெரியாமல் உருவப்படும்… வனவாச நாளன்று அத்தனை காவடிகளிலும் மாமாவின் காவடி தனியாகத் தெரியும் எனக்கு… வேலையும் குத்திட்டு காவடியை தோளில் வைத்துக்கொண்டு சும்மா சிங்கம் மாதிரி சிலிர்த்துக்கிட்டு வருவாரு மனுஷன்…
Old Mercedes lorry முகப்போட ஐஸ்கிரீம் வண்டிகள், பெட்ரோல் மேக்ஸ் லைட் வெளிச்சத்தில் கடைகள், மண்ணெண்ணெய் ஜெனரேட்டர்கள் சத்தத்திற்கு நடுவ, கம்பீரமாய் கேட்கும் ஆலயத்தில் பாடப்படும் மகாபாரதம் அந்த குரல்களுக்கு அப்படி ஒரு வசீகரம், கம்பீரம்….
பதினெட்டாம் நாள் தீப்பள்ளையம் “பெருவேள்வி தீ” யில் பாண்டவர் இறங்க, கோவில் திருவிழா மகத்துவம் பெறும்…..
இறுதி நாளில் இதயம் கணக்க, மீண்டும் அடுத்த ஒரு வருடத்திற்கான காத்திருப்பு தொடங்கிவிடும்.


