பாறுக் ஷிஹான்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் பணிப்பாளர்கள்  அம்பாறை மாவட்டம்  கல்முனை பகுதிக்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வைத்து சிவில் அமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்   நெறிப்படுத்தலில் குழுக் கலந்துரையாடல்  இடம்பெற்றதுடன்   சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய சூழலில் சிவில் அமைப்புக்கள் செயற்படுவதால் ஏற்படும் சவால்கள் அண்மையில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமை மீறல்கள் பற்றியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறைகள் பற்றியும் இதன்போது  கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வலிந்து காணாமல் போன  உறவினர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.இக்குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற பாதுகாப்புப் பிரச்சினைகள்  சட்ட ரீதியாகவுள்ள உரிமைகள் பற்றியும் இதனை பிரயோகிக்கின்ற போது ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.மேலும்  அம்பாரை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் காணி உரிமை சம்பந்தமாகவும்   நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் மக்களிடம் இருபது வருடங்களுக்கு மேலாக கையளிக்கப்படாமை  பற்றியும்   கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் பற்றியும் அதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் நிர்வாகக் குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி மக்களின் கோரிக்கைகளை ஆணைக்குழு உரிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்  இது 1996 ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கமைவாக சட்டத்தை அமுல்படுத்தி அச்சட்டத்தில் உள்ள அரசுக்கு ஆலோசனை கூறுகின்ற அதிகாரம் மற்றும் மனித உரிமைகள் விடயப்பரப்பிற்குள் மனித உரிமைக்கான கல்வி மற்றும் அதனோடு இணைந்த விடயங்களை மேம்படுத்துவதற்கான விடயங்களை செய்கின்ற போது மனித உரிமை ஆணைக்குவிற்கு ஆளணி பற்றாக்குறை இருக்கின்றது.அந்த ஆளணி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக சிவில் சமூகங்களுடன் இணைந்து வினைத்திறனுடன் பல்வேறு தீர்வுகளை பெற முடியும் என  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய  தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்   பேராசிரியர் தையமுத்து தனராஜ் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

 மனித உரிமைகள் என்பது 30 உறுப்புரைகளை கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அந்த ஒவ்வொரு உரிமைகள் விடயத்திலும் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.பாடசாலை மாணவர்களின் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து மனித உரிமை கல்வியினை உட்புகுத்த வேண்டும்.எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்  சட்டத்தரணி நிமால் ஜி புஞ்சிஹேவா தனது கருத்தில் தெரிவிதததாவது

சிவில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆணைக்குழுவானது தீர்த்து வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவில் மக்களை பலப்படுத்துகின்ற செயற்பாட்டில் ஆணைக்குழு ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக பொலிஸார் அரச நிறைவேற்று உத்தியோகத்தர்கள் ஆகியோர் மனித உரிமைகளை மீறுகின்ற போது உடனடியாக அது தொடர்பில் அறிவிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரச்சினை, காணிப்பிரச்சினை, சிவில் அமைப்புகள் எதிர்நோக்கும் சவால்கள் ,பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் அநீதிகள், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், நிகழ்நிலை சட்டம் தொடர்பிலான பிரச்சினைகள் ,ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தொழிநுட்ப சமூக ஊடகங்கள் வாயிலான இடம்பெறுகின்ற வன்முறைகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,காணி எல்லை பிரச்சினைகள், ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்  சட்டத்தரணி நிமால் ஜி புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்   பேராசிரியர் தையமுத்து தனராஜ் ,விசாரணை புலனாய்வு பணிப்பாளர் லால் வீரசிங்க மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் ஏ.டபிள்யு.எம். அஹமட் என மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் மட்டக் குழுவில் ஏனைய அதிகாரிகளும்  இணைந்திருந்தனர்.