ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!

காண்பியக் கலைப் படைப்பாளர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் காலை 9:30 தொடக்கம் மாலை 5:00 நடைபெறவுள்ளது.

ஓவியர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமார் தொடர்பாக…

மத்திய முகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து கமு/சது/ சரஸ்வதி வித்யாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் தரத்தினையுங் கற்று திரு சா.செல்வசிகாமணி ஆசிரியரிடமும் திரு த.வாமதேவன் ஆசிரியரிடமும் சித்திரக்கலைக் கல்வியினைக் கற்றுச் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலமும் தொழிநுட்பக் கலைகளும் பாடத்தில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர்.


2017 ஆம் ஆண்டிலிருந்து வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைப் படைப்பாளர்களுடன் இணைந்து காண்பியக் கலைப் படைப்புகளை உருவாக்கிக் கண்காட்சிகளில் பங்கு பற்றி வருகின்றார்.


இவரது ஓவியங்கள் உள்ளூர்ப் பெண்களுக்கு நுண்கடன் மூலமாக ஏற்படுகின்ற வன்முறைகளை வெளிப்படுத்துவதாகவும் அந்த வன்முறைகளில் இருந்து மீண்டெழ உள்ளூர் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளும் தற்சார்பான உற்பத்திப் பொருளாதாரமே சரியானது என்பதை வலியுறுத்துவதாகவும் இவரது படைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இவர் உள்ளூர் ஓவியனாகவும் உள்ளூர்ப் பெண்களின் பிரச்சினைகளை ஓவியங்களின் ஊடாகப் பேசுவதனாலும் எனது ஓவியங்களில் பாரம்பரிய உள்ளூர்ப் பின்னல் முறைகளின் நுட்பத்தைக் கையாண்டு வருவதுடன் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களை ஓவியத்திற்கான ஊடகமாகவும் பயன்படுத்தி வருகின்றார்.
பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதும் வன்முறைகளுக்குட்படுத்தப்படுவதும் காலங் காலமாக நடந்து கொண்டே இருக்கின்றன.
ஆதிக்க சமூகங்களும், ஆதிக்கச் சிந்தனையாளர்களும் அதற்கெனப் பல உத்திகளைக் கையாளுகின்றனர்.இந்த ஆதிக்கங்களையும் வன்முறைகளையும் எதிர்த்து இயங்குதலே எனது கருத்தியல் ஆகும்.


நுண்கடன் எனும் ஒழுங்கு முறையற்ற திட்டத்தால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும் துயரங்களும் மிக மோசமானவை.


கடன் திட்டங்கள் ஒருவருடைய பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் ஆனால் சில கடன் திட்டங்களால் பெண்களின் பொருளாதார வாழ்வு சீர்குலைகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது.


நுண்கடன் எனும் வலையில் பெண்கள் விழக் காரணம் நிரந்தர உழைப்பின்றி மற்றொருவரை நம்பித் தங்கி வாழ்வதாகும்.


நுண்கடனெனும் சதியில் இருந்து மீண்டெழல், நுண்கடனால் ஏற்பட்ட வன்முறைகளில் இருந்து மீண்டெழல் தங்கி வாழும், பிறரை நம்பி வாழும் எண்ணங்களில் இருந்து மீண்டெழல், முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களது பொருளாதாரத்தில் எழுந்து வேரூன்றி நிற்கவும் மற்றொருவரின் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக வாழவும் ‘மீண்டெழல்’ அவசியமாகிறது என ஓவியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.