RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை!
ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !
( வி.ரி.சகாதேவராஜா)
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் (25) திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சீற்றத்துடன் தெரிவித்தார்.
கல்முனை ஊடக மையத்தில் இன்று (25) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த காலத்தில் வீரமுனை ஆண்டிர சந்தியில் ஆலய வளைகோபுரம் அமைப்பதற்கு முயற்சித்த வேளையில் இதே தரப்பினர் இடையூறு விளைவித்த ரன். அன்றைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல் அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தனது ஆதிக்கத்துக்குட்பட்ட “ஏ” தர பிரதான வீதியில் வீரமுனை பெயர்ப் பலகையை அமைப்பதற்கு முற்பட்டபோது, பிரதேச சபையின் அதிகாரங்கள் என்ன என்று தெரியாத ஒருசில உறுப்பினர்கள் இடையூறு விளைவித்து தடுத்திருக்கின்றனர் .
இதன் பின்னணி என்ன ? இனவாதம் விதைத்தவர்கள் இன்று செல்லாக்காசாய் போய்விட்டார்கள். இனவாதத்தை வைத்து அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது.
பிரதேச சபைக்குரிய அதிகாரங்களைஅறியாமல் இரு சமூகங்களையும் மோதி விடுகின்ற செயற்பாட்டை அங்குள்ள ஒரு சில உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்கள் .இது கவலைக்குரிய விடயம் .
கல்முனைக்கான பெயர்ப்பலகை கல்முனை தென் எல்லையான தரவைப் பிள்ளையார் ஆலய மருகில் நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது கல்முனைக்குடி எல்லையில்
சாய்ந்தமருது முடிவிடத்தில் அமைந்திருக்கின்றது.
இருந்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் கேட்கவில்லை.
இதே போன்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் பெயர்ப் பலகை கல்முனை பிரதான வீதியில் தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நடப்பட்டிருக்கின்றது. ஒன்றரை கிலோமீட்டர் உட்புறமாக அந்த பள்ளிவாசல் அமைந்து இருக்கின்றது . ஆகவே மக்களுக்கு வழிகாட்ட அப் பெயர்ப் பலகை அமைந்தது
நியாயமானது. நாங்கள் தமிழர்கள் அதனை ஏன் என்று கேட்கவில்லை .
அதேபோன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் உட்புறமாக உள்ள பாலமுனை முஸ்லிம் கிராமத்துக்குரிய பெயர்ப்பலகை பிரதான வீதியில் நடப்பட்டிருக்கிறது. அதனை கூட நாங்கள் கேட்கவில்லை .
அவையெல்லாம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரமுள்ள பிரதேசம். அது அவர்களது உரிமைகடமை.
இந்த நிலையில் சம்மாந்துறை பிரதான வீதியில் வீரமுனை பகுதியில் வீரமுனைக் கிராமத்தை சுட்டிக் காட்டுகின்ற பெயர்ப்பலகையை அதற்கு முழுஅதிகாரமும் கொண்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடுகின்ற பொழுது அதற்கு எந்த அதிகாரமும் இல்லாத பிரதேச சபையினர் தடுத்து நிறுத்துகின்றார்கள்.இது நியாயமா? நீதியா? படித்த சமூகம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை போலீசார் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஏன் இதனை சட்டம் நீதிக்கு முன் நிறுத்தவில்லை? கடமைக்கு இடையூறு விளைவித்த என்று கடந்த காலங்களில் எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
இன உறவு பற்றி பேசுகின்ற தவிசாளர் என்ன சொல்கின்றார் ?
அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களும் சேர்ந்து வாக்களித்தன் பலனாக தேசிய பட்டியல் எம்பியாக ஆதம்பாவா நியமிக்கப்பட்டார்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கூறிய போராளிகள் வீரமுனையிலும் இருக்கின்றார்கள். இவர்கள் ஏன் இந்தப் பிரச்சினைக்கு ஆதம்பாவாவிடம் சென்று தீர்த்து வைக்க முடியாதா?
மேலும் ஆதம்பாவா எம்பி இந்த வீரமுனை சம்பவத்தை இதுவரை ஏன் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்?
இனமத பேதமற்ற அரசாங்கம் என்று கூறும் இன்றைய அரசாங்கம் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை?
வீரமுனையில் ஒரு உறுப்பினருமுள்ளார். இதுவரை அவர் வாய்திறக்க வில்லை. அவரை அந்த மக்கள் எதற்காக தெரிவு செய்தார்கள்?
அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தால் வேற இடம் என்றால் மறுகணம் கூட்டுக்குள் அடைத்து விடுவார்கள் .
ஆனால் இங்கே வீதி அபிவிருத்தி அதிகாரிகள் வாய் மூடி மௌனியாக திரும்பி வந்திருக்கிறார்கள். ஏன் ? அவர்கள் இதுவரை போலீசில் முறைப்பாடு செய்தார்களா ? சட்ட நடவடிக்கை எடுத்தார்களா?
இலங்கையின் முறைப்படி அதிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
RDA. இற்கு சொந்தமான வீதியில் பிரதேச சபையின் அதிகாரம்
1. RDA (Road Development Authority) சொந்தமான சாலைகள்
தேசிய வீதிகள் (A-கிளாஸ், B-கிளாஸ் சாலைகள்) அனைத்தும் RDA-வின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அந்தச் சாலைகளில் பலகை, விளம்பரம், பெயர்பலகை போன்றவற்றை வைக்க RDA அனுமதி தேவை.
சட்டப்படி Local Authority (Pradeshiya Sabha, Urban Council, Municipal Council) க்கு RDA சாலைகளில் நேரடி அதிகாரம் இல்லை.
2. பிரதேச சபையின் பங்கு
சபை வரம்புக்குள் உள்ள உள்ளூர் வீதிகள் (rural roads, by-roads) மீது பிரதேச சபைக்கு அதிகாரம் உண்டு.
ஆனால் RDA வீதியில் யாராவது பெயர் பலகை வைக்க வந்தால்,
பிரதேச சபை சட்டரீதியாக தடுக்க அதிகாரம் கிடையாது.
அவர்கள் செய்யக்கூடியது: “இது RDA-வின் கீழ் வரும் சாலை. RDA அனுமதி பெற்றீர்களா?” என்று கேட்பது.
தவறு இருந்தால், RDA-விற்கு தகவல் கொடுக்கலாம்.
3. சட்ட அடிப்படை
RDA Act No. 73 of 1981 – தேசிய சாலைகளின் பராமரிப்பு, கட்டுப்பாடு முழுவதும் RDA க்கு மட்டுமே.
Pradeshiya Sabha Act No. 15 of 1987 – உள்ளூர் சாலைகள் மட்டுமே சபை அதிகாரத்தில்.
முடிவு
RDA சொந்தமான சாலையில் பெயர்ப்பலகை வைக்க வருபவர்களை பிரதேச சபை தடுக்க முடியாது. அவர்கள் செய்யக்கூடியது அனுமதி பெற்றீர்களா எனச் சரிபார்த்து, தவறு இருந்தால் RDA-வுக்கு தகவல் கொடுப்பது.
நாங்கள் பலகாலமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த ஓரு சமூகமாக தமிழ் பேசும் மக்களாக தமிழர்களும் முஸ்லிம்களும் இருந்து, வந்திருக்கின்றோம் .
முரண்பாடை களைந்து நீதியின் பால் தீர்க்க வேண்டும். அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வீரமுனை பெயர்ப் பலகையை நாட்ட வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.