கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு  மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

 பாறுக் ஷிஹான்-

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி   மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 08  அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்று   உத்தரவிட்டது.


கடந்த ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை  (18) மாலை  அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற  நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து  இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில்  கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் மறுநாள்  செவ்வாய்க்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.பின்னர் இன்று(25) கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி   மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 08  அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் செயலினால் கடந்த காலத்தல் பாதிக்கப்பட்ட   நபர்   இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம்     வழக்கு ஒன்றிற்காக  தன்னிடம் ரூபா 2300   பணம்  இலஞ்சமாக கேட்கப்படுவதாக   முறைப்பாடு ஒன்றினை   மேற் கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்பவ  தினமன்று மாறுவேடத்தில்  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில்   காத்திருந்து  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள்    நீதிபதி மற்றும் மனைவியை  கைது செய்திருந்தனர்.

இதன் போது   கைது செய்யப்பட்ட நீதிபதி ரூபா  2000 உம் அவரது மனைவி ரூபா 300 உம்   இலஞ்சமாக பெற்றுள்ளதாக  ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட  சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண  விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.