களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

(வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று  (10) ஞாயிற்றுக்கிழமை  களுதாவளை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது  .

ஓய்வு நிலை  இலங்கை நிர்வாக சேவை அதிகாரி   கலாநிதி சி. அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்  செயலாளர் பி.தயாநந்தன் , முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி ந.சிவலிங்கம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்எல்எம்.ஹனிபா , கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் , முன்னாள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.நசீர் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

விழாவில் மணிவிழா சிறப்பு மலர்கள் இரண்டு வெளியிட்டு வைக்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

சிறப்பு மலருக்கான ஆய்வுரைகளை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வேலுப்பிள்ளை குணரத்தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அனிரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

சிறப்புரைகளை முன்னாள் கிழக்கு மாகாண இளைஞர் சேவை அதிகாரி பொன்.செல்வநாயகம் மற்றும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.

இடையிடையே கண்கவர் நடனங்கள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றன.

இறுதியாக மணிவிழா நாயகன் மூ.கோபாலரெத்தினம் திருமதி கீதா கோபாலரெத்தினம் ஆகியோர் சரமாரியாக பொன்னாடை போர்த்தி மாலை சூட்டி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 கிழக்கு மாகாண மணிவிழா ஏற்பாட்டுக் குழு விழாவை நடாத்தினர். அனைவருக்கும் விருந்துபச்சாரம் இடம் பெற்றது.