வி.சுகிர்தகுமார்    

வெள்ள அனர்த்தத்தினை தடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்  (05)ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ரகுபதி அக்கரைப்பற்று மாநகர சபை பிரதிமேயர் யு.எல்.உவைஸ் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.சுகிர்தரன் கலந்து கொண்டதுடன்; சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


வெள்ள அனர்த்த பாதிப்பு, அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள், எதிர்காலத்தில் வெள்ளம் அனர்த்தம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, ஒவ்வொரு பிரதேசத்திற்கான வெள்ள அனர்த்த குழுவை அமைத்தல் போன்ற விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.


பல நீர்நிலைகள் பலரால் அபகரிக்கப்பட்டு வாழ்விடங்களாக மாற்றப்பட்டமையே வெள்ளம் அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணம் என இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இக்கூட்டத்தின் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் நிகழாமல்; தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கினார்.


இதேநேரம் சின்னமுகத்துவாரம் அகழ்வது தொடர்பில் தன்னிச்சையாக நீர்ப்பாசன திணைக்கள் செயற்படக்கூடாது எனவும் அனைவரது கருத்தையும் பெறவேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ரகுபதி வலியுறுத்தினார்.


இதற்கு பதிலளித்த பொறியியலாளர் சின்னமுகத்துவாரம் அகழ்வது தொடர்பில் அமைப்புக்கள் கடிதம் தந்தால் உடன் வெட்டப்படும் எனவும் யாருடைய கருத்துக்களும் கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியபோது சபையில் எதிர்கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.


 இங்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில்,


வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்ற பிரதான காரணம் தொடர்பான பல்வேறு விடயங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். முறையான உட்கட்டுமானப்பணிகளின் மூலம் வெள்ள அனர்த்தத்தை குறைக்க முடியும் என்பதை மக்களுக்கு தெளிவூட்டுவதுடன் பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கும்போது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அனைவருக்கும் வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.


தொடர்ந்து வெள்ள அனர்த்தம் தவிர்ப்பது தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு களவிஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.