நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள்!

காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி 

( வி.ரி.சகாதேவராஜா)

நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் சிறியவரோ, பெரியவரோ யாராக இருந்தாலும்  படிப்படியாக அவர்களெல்லாம் கைது செய்யப்படுவார்கள். சொத்துக்கள் பறிமுதலாகும். ஊழல் மோசடி இல்லாத மக்கள் அபிவிருத்தியே எமது நோக்கம்.அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு காரைதீவுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (29.07.2025) செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

 காரைதீவு  பிரதேச செயலாளர் ஜி. அருணன்  ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.எஸ். உதுமா லெப்பை, எம்.எஸ் அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் காரைதீவு பிரதேச சபைதவிசாளர் சு. பாஸ்கரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா மேலும் தெரிவிக்கையில்..

எந்நேரமும் மக்கள் மக்கள் என்று சிந்திக்கின்ற தலைமை தோழர் அனுரகுமார அவர்கள் . எப்பொழுதும் மக்களைப் பற்றி பேசுகின்ற ஒரு தலைவர் .

யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை. அரச ஊழியர்கள் நீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறீர்கள்.  இந்த நாட்டு மக்கள் கடந்த பல வருடங்களாக இன்னல்களை அனுபவித்தவர்கள். தொடர்ச்சியாக அவர்கள் அதனைஅனுபவித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை .

விரைவாக இந்த பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பாக என்னால் முடிந்தவரை இந்த பிரதேச செயலாளரோடு சந்திப்பது உரையாடுவது வழமை.

அரசாங்க ஊழியர்களுக்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவ்வப்பொழுது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு வருகிறது .எதிர்வரும் பட்ஜெட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

அதேவேளை மக்கள் அபிவிருத்திக்காக அரசாங்கம் அதிகளவு நிதியை  மாவட்ட மட்ட நிகழ்ச்சி திட்டங்களின் மூலமாக ஒதுக்கி வருகிறது. காரைதீவு பிரதேசத்திற்கு இருபது மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை நிதி பிரதேச சபைக்கு கோடிக்கணக்கில் அனுப்பப் பட்டுள்ளது. அவற்றை அதிகாரிகள் முறையாக செலவு செய்ய வேண்டும்.

கிராம சேவகர் கூட மோசடி செய்தால் அவர்களை கொழும்பு க்கு அழைத்து விசாரிக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆட்சி. அது நிச்சயமாக மக்களை மையப்படுத்தியே நகரும் என்றார். பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

 அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.