மட்டக்களப்பு RDHS – பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வழங்கப்படும் பகல் உணவின் சுகாதாரத் தரத்தைப் பேணுவது தொடர்பான ஒரு முக்கிய கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
04.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமைனையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள். பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், உணவு வழங்குநர்கள், உணவு ஒப்பந்தக்காரர்கள், உணவு சமைப்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த கலந்துகொண்டனர்.
பிராந்திய தொற்றுநோயியலாளர் Dr. எஸ். சரவணன் அவர்களினால் உணவு நஞ்சாதல் மற்றும் நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வு பற்றிய தகல்களுடன் ஆரம்பமான இக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பரிந்துரைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுதலினை அனைத்துத்தரப்பினரும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .
• உணவு கையாளுதல் மற்றும் பாதுகாப்பு :
உணவு சமைத்தல், பாதுகாப்பான முறையில் வகுப்பறைகளுக்குக் கொண்டு செல்லல் மற்றும் உணவு பரிமாறுதல் போன்ற செயற்பாடுகளை மருத்துவச் சான்றிதழ் பெற்ற ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
• மாமிசப் பொருட்களைப் பயன்படுத்துதல் :
குளிரூட்டப்பட்ட மாமிசப் பொருட்களை சமைப்பதற்கு நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னரே சாதாரண குளிர் நிலைக்குக் கொண்டு வந்து சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்
• சுகாதாரமான குடிநீர் :
மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்
• பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தவிர்ப்பு :
உணவு பரிமாறும்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்
• மாணவர்களுக்கு சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல் :
சாப்பிட முன் மாணவர்கள் சோப்புப் போட்டு கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும்
• ஒப்பந்தக்காரர் தெரிவு நடைமுறைகள் :
பாடசாலை உணவு வழங்குவதற்கான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதில், வெளிப்படையான கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் சமையலுக்குப் பொறுப்பானவர்களே ஒப்பந்தக்காரர்களாக இருக்க வேண்டும்.
• சுகாதாரப் பரிசோதகர்களின் மேற்பார்வை :
உணவின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக பொது சுகாதாரப் பரிசோதகர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பும், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்பார்வைப் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் மேற்பார்வையும் அத்தியாவசியத்தினை கருத்தில் கொண்டு அதற்கான ஒத்துழைப்பினை பாடசாலைகள் வழங்கவேண்டும்.
• உணவு வழங்குநர்கள் பற்றிய தகவல் :
பாடசாலை நிருவாகத்தினர் உணவு வழங்குனர் பற்றிய விபரங்களை சுகாதார துறையினரோடு பகிர்ந்து கொள்ளுதல் அவசியமானது.
• சமையல் இடம் மற்றும் போக்குவரத்து :
உணவு சமைக்கும் இடங்கள் சமையலுக்கு உகந்ததாக இல்லாததும், தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு சமைத்த உணவு கொண்டு செல்லும்போது ஏற்படும் பாதிப்புகளும் கருத்தில் கொண்டு பாடசாலைக்கு அண்மையில் உணவு சமைக்கும் இடங்களை ஏற்படுத்தல் வேண்டும்.
• சமையலறை வசதிகள்:
பாடசாலைகளில் சமையலுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவது குறித்து வலயக் கல்வி அதிகாரிகாரிகள் கவனமெடுக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு , வெளிநாட்டு நிறுவனங்கள், அனுசரணைகள் மற்றும் நலன்விரும்பிகள் மூலம் நிதி பெற முயற்சிக்கலாம்.
• தொடர்ச்சியான கூட்டங்கள்:
அதிக பாடசாலைகளைக் கொண்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், குறைந்த பாடசாலைகளைக் கொண்டவர்கள் மாதந்தோறும் உணவு பாதுகாப்புக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு மேற்படி விடயங்கள் முதற்கட்டமான தீர்வுகளை வழங்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















