ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்  தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாறுக் ஷிஹான்

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்  தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில் முஸ்லிம் மீடியா போரம் நாம் ஊடகர் பேரவை போன்ற ஊடக அமைப்புகளும் தனியார் ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பல்வேறு கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் குறித்த ஊடகவியலாளரை தாக்கிய சந்தேக நபர்களை சட்டத்தின் முன்நிறுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்

இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரும். சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீது அட்டாளைச்சேனை பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் கடந்த ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இவ்வமைப்புக்கள்  கண்டிக்கிறது.

‘என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்’ எனக் கேட்டவாறே ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு ஊடகவியலாளர்களின் ஊடகப் பணிக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். அத்துடன் ஊடக சுதந்திரத்தினையும் கேள்விக்குரியாக்கின்றது. ஊடகவியலாளர் மப்றூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் எனைய ஊடகவியலாளர்கள் மீது இடம்பெறாததை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

அதனால்இ இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என மீடியா போரம் வேண்டுகோள் விடுக்கிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை பதில் பொலிஸ் மா அதிபர் முன்னெடுக்க வேண்டும் என அவ்வமைப்புக்கள்  கோரிக்கை விடுத்துள்ளன.

செய்தி பின்னணி


ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்  தாக்குதல்

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர்  என்பவர் தலைமையிலான காடையர்கள் நேற்று (02) இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவரும், இன்னுமிருவரும் மப்றூக் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

”என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே, மப்றூக் மீது றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக, தனது பொலிஸ் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் மப்றூக் கூறியுள்ளார்.

றியா மசூர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றியா மசூர் அழைத்து வந்த காடையர்களுக்கு எதிராக, ஏற்கனவே பொதுமக்களைத் தாக்கியமை மற்றும் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  

இதன்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இல்லா விட்டால் ஊடகவியலாளருக்கு – மேற்படி காடையர்கள் உயிராபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட றியா மசூர் என்பவர், தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து விட்டுச் சென்றதாகவும், ஊடகவியலாளர் மப்றூக் – தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.