சீதமிழ் saregamapa சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்! தெரிவானதும் மகிழ்ச்சியில் அழுதழுது விளக்கம்
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில் இடம்பெறும் சரிகமபா சீஸன் 5 இற்கான பாடல் நிகழ்ச்சியில் தேர்வாகி சுற்றுக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சீதமிழ் ஸரிகமபா நிகழ்வில் பாடுவதற்கு தெரிவான முதல் பாடகர் சபேசன் என்பது பெருமைக்குரியது.
தெரிவானபோது மேடையில் உணர்ச்சி வசப்பட்டு அழுதழுது தனது விளக்கத்தை நடுவர்களிடம் வழங்கினார்.
தான் அதிஸ்டமில்லாதவன்.பட்டதாரியான பின்னரும் கடந்த ஐந்து வருடங்களாக தொழிலின்றி குடும்பத்தை வழிநடத்த சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இங்கு இப்படி முதல் சுற்றில் ஜெயித்தது வாழ்க்கையில் மறக்க முடியாது. மிகவும் மகிழ்ச்சி. அம்மாவுக்கும் அனைவருக்கும் நன்றிகளைக் கூறினார்.
அவரது தெரிவுக்கு சரமாரியாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அவர் பிறந்த அம்பாறை மாவட்டம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளர் முதல் பலரும் மனப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் எமது நாட்டுக்கும் எமது அம்பாறை மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்து வெற்றி நாயகனாக மகுடம் சூட எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆசிவழங்கியுள்ளார்.
இதேவேளை அவர் பிறந்த வினாயகபுரத்தில் பிறந்து இம்முறை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக வரவிருக்கும் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் வாழ்த்துத் தெரிவிக்கையில்..
Zee தமிழ் சரிகமபாவில் தம்பி சபேஷனின் வெற்றி எமது மண்ணுக்கு கிடைத்த பெருமை. வாழ்த்துக்கள் சபேஷன் என்றும் எனது உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
சபேசன்பாடசாலை மற்றும் கிராமத்து கலை நிகழ்வுகளில் தன்னுடைய வசீகரமான குரல் வளத்தால் பல பாடல்களைப் பாடி கிராமத்தவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
சக்தி டிவி 2014 ஆம் ஆண்டு நடத்திய சக்தி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் Runner-Up மகுடத்தினைப் பெற்றார்.
இதன்பின் இலங்கை முழுவதும் இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சிகளில் இவருடைய குரல் ஒலிக்கத் தொடங்கியது.
தன்னுடைய இசை வாழ்வில் உச்சம் காண நினைக்கும் இந்த இசைப்பிரியனுக்கு இந்திய மண்ணில் தடம் பதிக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்துகின்ற சபேஷன் ஜீ தமிழ் சரிகமப மேடையிலும் சாதனை படைப்பான் என்ற பெரும் நம்பிக்கையோடு கிராமமும் ஒட்டு மொத்த சொந்தங்களும் காத்திருக்கின்றோம் என்று அமைப்புக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.








