ஒவ்வொரு நபரையும் பல்வேறு சூழ்நிலைகளில் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை: ஒரு உளவியல் பார்வை – சதானந்தம் ரகுவரன்
மனிதர்கள் சமூக உயிரினங்கள். நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதும், அங்கீகாரத்தைத் தேடுவதும் இயல்பானது. ஆனால், “ஒவ்வொரு நபரையும் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்திப்படுத்த முடியாது” என்பது ஒரு கடினமான உண்மை. இந்தக் கருத்தை உளவியல் கோணத்தில் ஆராய்வது மனிதஉறவுகளின் சிக்கலான தன்மை மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கக்கூடும். இக்கட்டுரையானது அத்தகைய புரிதல்களை சுருக்கமாக ஆராய விளைகின்றது.
மனிதத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் பன்முகத்தன்மை
மாஸ்லோவின் “தேவைகளின் படிநிலைக் கோட்பாடு” (Maslow’s Hierarchy of Needs) படி, மனிதர்களின் தேவைகள் உடல் பாதுகாப்பு முதல் சுயமுனைப்பு வரை பல தளங்களில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு நபரின் தேவைகள், மதிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அவரது வாழ்க்கை அனுபவங்கள், கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியால் வடிவமைக்கப்படுகின்றன. எனவே ஒரே செயல் அல்லது முடிவு அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க முடியாது.
உதாரணமாக ஒரு சமூகத்தில் மூத்த தலைமுறையினர் கருதும்“கடுமையான ஒழுக்கம்” என்பது இளைய தலைமுறையினரின்”நெகிழ்வுத்தன்மை” என்பதுடன் ஒத்துப்போகாது. எனவே இரண்டு குழுக்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவது சவாலானது. சாத்தியமற்றதுமாகும்.
அங்கீகாரத்திற்கான உளவியல் போராட்டம்
மனிதர்கள் இயல்பாகவே சமூக ஏற்றுக்கொள்ளலை (Social Acceptance) விரும்புகிறார்கள். இது இணைந்து வாழும் உள்ளுணர்வு (Herd Instinct) மற்றும் சொந்தத்தைஉருவாக்கும் தேவை (Need for belongingness) ஆகியவற்றால் விளக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தேவை மிகைப்படும்போது, “மக்களைத் திருப்திப்படுத்தும் நோய்” (People-Pleasing Syndrome) உருவாகலாம். இந்நிலைமையானது,
• கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
• சுயமரியாதையைக் குறைக்கிறது (“நான் போதுமானவனாக அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கவனாக இல்லையா?” என்ற சந்தேகம்).
• உறவுகளில் போலித்தன்மையை உருவாக்குகிறது.
குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளின் மோதல்
ஒவ்வொரு நபரும் தனித்துவமான குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்டுள்ளனர். உளவியலாளர் கார்ல் யங் (Carl Jung) குறிப்பிடும் “ஆளுமை வகைகள்” (Personality Types) இதை விளக்குகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு நபர் “உணர்ச்சி-சார்ந்த” வராக(Feeling Type) இருந்தால், மற்றவர்களின் உணர்வுகளை முன்னிறுத்துகின்றார். மற்றொருவர் “தர்க்கம்-சார்ந்த” வராக(Thinking Type) இருந்தால், நியாயத்தை முன்னிறுத்துகின்றார். இந்த இயல்புகள் மோதும்போது அனைவரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது.
காரண–காரியத் தெளிவின்மை (Cognitive Dissonance )
உளவியலில் cognitive dissonance என்பது ஒரு நபரின் நம்பிக்கைகள் மற்றும் செயல்கள் முரண்படும்போது ஏற்படும் மன உளைச்சலைக் குறிக்கின்றது. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நாம் நமது மதிப்புகளைத் தியாகம் செய்தால் இந்த முரண்பாடு வலுவடைகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கு “இல்லை” என்று சொல்லமுடியாமல், சொந்த நேரத்தை அல்லது தேவைகளை தியாகஞ்செய்வது பின்னர் வருத்தத்தை ஏற்படுத்தும்.
உறவுகளின் யதார்த்தமான காட்சி
உளவியலாளர் டயன் குஷ்சீர் (Diane Kushnir) கூறுவதுபோல் “உறவுகள் 100% கட்டுப்படுத்த முடியாதவை. அவை வளர்ச்சி மற்றும் மோதல்களின் மூலமே உருவாகின்றன.” ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்பதால், எல்லோருடனும் ஒத்துப்போவது இயலாது. மாறாக, உண்மையான உறவுகள் (Authentic Relationships) என்பது வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, பரஸ்பர மரியாதையிலும், புரிந்துணர்வுகளிலும், விட்டுக்கொடுப்புகளிலும் அமைகின்றன.
தீர்வுக்கான உளவியல் உத்திகள்
1. எல்லைகளை வரையறுக்கவும் (Set Boundaries ): “என்தேவைகளும் முக்கியம்” என்பதை அங்கீகரிக்கவும்.
2. சுய-கருணை (Self- Compassion): தவறுகளுக்கு தன்னை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
3. உள்-கட்டுப்பாட்டு மையம் (Internal Locus of Control): மற்றவர்களின் கருத்துகளைவிட உங்கள் மதிப்புகளை முன்னிறுத்துங்கள்.
4. உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence): மற்றவர்களின் கோபம் அல்லது ஏமாற்றம் உங்கள் பிரச்சினைஅல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
முடிவு
“அனைவரையும் திருப்திப்படுத்துவது” என்பது ஒரு கற்பனைக்குறிக்கோள் ஆகும். உளவியல் படி இந்த சுமையை சுமப்பது மனஆரோக்கியத்தை பாதிக்கும். மாறாக “இதுதான் நான்” என்ற உண்மையான தன்னை ஏற்றுக்கொள்வது மற்றும் கவனம் செலுத்துவது நீடித்த மனநிறைவுக்கு வழிவகுக்கும். வாழ்க்கை ஒரு கூட்டு நடனம்; ஆகும். அனைவருடனும் ஒரே சீராக ஆடவும் முடியாது : நடக்கவும் முடியாது. ஆனால் சிலருடன் இசைந்து நடப்பதே போதுமானது!
சதானந்தம் ரகுவரன்
B.Sc (Hons) in Psychology & Counselling
Contact: 0777962758