காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்;
முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
( வி.ரி. சகாதேவராஜா)
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது.
இக் கட்சியின் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மீண்டும் தவிசாளராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
07 வட்டாரங்களுள்ள காரைதீவில் 11 உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றார்கள்.
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி நான்கு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுயேச்சை குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
தெரிவான பிரதான வேட்பாளர்களுள் இருவர் முன்னாள் தவிசாளர்கள், ஒருவர் முன்னாள் உப தவிசாளர் ,இருவர் முன்னாள் உறுப்பினர்களாவர்.
முன்னாள் தவிசாளர்களான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், யோகரெத்தினம் கோபிகாந்த் ஆகியோரும் முன்னாள் உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்எச்எம்.இஸ்மாயில், சு.பாஸ்கரன் ஆகியோர் தெரிவாகி இருக்கின்றார்கள்.
வட்டாரம் 3 இல் இலங்கை தமிழரசுக் கட்சி. 786 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் ஆசிரியர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டாரம் 4 இல் இலங்கை தமிழரசுக் கட்சி. 981 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் பட்டதாரி ஆசிரியர் வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வட்டாரம் 6 இல் இலங்கை தமிழரசுக் கட்சி. 812 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் மாவடி கந்தசாமி ஆலய செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டாரம் 7 இல் இலங்கை தமிழரசுக் கட்சி. 1101 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன் படி காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஏழு வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
மீதி மூன்று வட்டாரங்களில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி பர்ஹான் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்மாயில் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஹில்மி ஆகியோர் தெரிவாகி இருக்கிறார்கள்.
ஏனைய நால்வரும் போனஸ் பட்டியலில் தெரிவாகி உள்ளனர்.
இதில் பெண் வேட்பாளர்கள் யாரும் தெரிவாகவில்லை. எனவே பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியின் போனஸ் பட்டியலில் இப் பெண் உறுப்பினர் தெரிவாக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சபையில் ஒரு தொங்கு உறுப்பினருடன் 12 உறுப்பினர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.



