ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி!
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
2025- உள்ளூராட்சி தேர்தல் நாளை ஆறாம் தேதி நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது.
அதாவது நாளைநடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பு நடைபெறும் தெரிவு எவ்வாறு நடைபெறும் என்பது தொடர்பாக காரைதீவு பிரதேச சபையை உதாரணமாக வைத்து இத் தெளிவுபடுத்தும் கட்டுரை அமைகிறது.
சுருக்கமாக கூறினால் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி மட்டும் இட்டால் போதுமானது.
ஏனைய ஜனாதிபதிதேர்தல், பாராளுமன்றத்தேர்தல், மாகாணசபை தேர்தல் போன்று இரண்டு மூன்று சின்னங்களுக்கு இலக்கம் இடுவதோ அல்லது சின்னத்திற்கு புள்ளடி இட்டபின் விருப்பு இலக்கத்திற்குமேல் புள்ளடி இடுவதோ இந்த தேர்தலில் இல்லை எனலாம்.
மாநகரசபை, அல்லது நகரசபை அல்லது பிரதேச சபைகளில் பல கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடும்போது அந்த கட்சியின் சின்னங்கள், சுயேட்சை குழுக்களின் சின்னங்கள் மட்டுமே வாக்குச்சீட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். வேட்பாளர்களுடைய பெயர் இருக்காது.
அரசியல் கட்சிகளாயின் சிங்கள அகரவரிசைப்படி நிரல்நிலை அமையும், அரசியல்கட்சிகளின் பெயர் மூன்று மொழிகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு அதற்கு நேரே கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும், கட்சிகளின் பெயர்களுக்கு, சுயேட்சைகுழுக்கள் இலக்கத்துடன் வலது புறம் சின்னங்கள்(படம்) பொறிக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமக்கு பிடித்த வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை இனம்கண்டு அவர் போட்டியிடும் சின்னத்திற்கு நேரே புள்ளடி() இட்டால் போதுமானது. வேறு எதுவும் செய்யத்தேவையில்லை.
எக்காரணம் கொண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களுக்கு அடையாளம் இட்டால் அது நிராகரிக்கப்படும்.
எந்த ஒரு வேட்பாளரின் பெயரும் வாக்கு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்காதுஎன்பது தெரிந்ததே.
உதாரணத்திற்கு காரைதீவு பிரதேச சபையை எடுத்துக்கொண்டால் 07 வட்டாரங்கள் இருக்கின்றன.
அங்கு 07 பிரதான வேட்பாளர்களும் துணை வேட்பாளர்கள் 07 (மேலதிக வேட்பாளர்கள்) மொத்தம் 14, வேட்பாளர்கள். உள்ளனர் .
இவர்கள் தாம் சார்ந்த கட்சிகளுக்கு அல்லது சுயேட்சை குழுக்களுக்காக பிரசாரம் செய்வார்கள்.
இதில் தேர்தல் தினத்தில் எதிர்வரும் (06/05/2025) வாக்களிப்பு நிலையங்களில் காலை 07, மணி தொடக்கம்,மாலை 04, வரை வாக்களிப்பு பணிகள் நடைபெறும்.
வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் 4.15 மணியளவில் உடனடியாகவே அந்தந்த வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெண்ணப்படும்.
அதில் எந்த சின்னம் கூடிய வாக்கை பெறுகிறதோ அந்த சின்னத்திற்கு உரிய பிரதான வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்.
துணை வேட்பாளர்கள் 07 பேரில் எந்த கட்சியில் இருந்து தெரிவானார்கள் என்பது வாக்களிப்பு நிலையங்களில் அறிவிக்கப்பட மாட்டாது. அதாவது விகிதாசார பட்டியல் முடிவு பின்னர் மாவட்டத்தில் அறிவிக்கப்படும்.
அதாவது அவை அன்று இரவு அம்பாறை ஹார்டி தொழில்நுட்ப கல்லூரியில் பிரதான வாக்கு கணிப்பு நிலையங்களில் வாக்குச் சீட்டுகள் சபை வாரியாக எண்ணப்படும்.
சகல கட்சிகளின் மொத்த வாக்கு கணிப்பீட்டின்படி அவை அறிவிக்கப்படும்.
காரைதீவுக்கான அந்த 07 உறுப்பினர்களில் ஏற்கனவே தெரிவான உறுப்பினர்களில் பெண் பிரதிநித்துவம் 25வீதத்திற்கு குறைவாக இருப்பின் அந்த 07 துணை வேட்பாளர்களில் இருந்து எந்தந்த கட்சி ஆசனங்களை பெறுகிறதோ அந்த கட்சியில் அல்லது சுயேட்சை குழுவில் இருந்து எத்தனை பெண் உறுப்பினர்களை தெரிவு செய்து தரவேண்டும் என்று தேர்தல் ஆணையகம் குறித்த கட்சிக்கு அல்லது சுயேட்சை குழுவுக்கு கட்டளை இடும்.
யாரை நியமிப்பது என்ற உத்தியோகபூர்வ முடிவு சம்மந்தப்பட்ட கட்சிகள் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்.
அந்த முடிவை கட்சி செயலாளர் அல்லது சுயேட்சை குழு தலைவர் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் எழுத்து மூலம் சமர்பிப்பார்கள்.
அந்த 07 துணை உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக முதல் அமர்வில் சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள்.
ஒருகட்சியில் 50 வீதத்திற்கு மேலாக உறுப்பினர்கள் தெரிவானால் அந்த கட்சி செயலாளர் அல்லது சுயேட்சை குழுத்தலைவர் நேரடியாக பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் பெயர்களை பரிந்துரை செய்ய கேட்கப்படுவார்கள்.
அதாவது காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மொத்தம் 11 . ஆகவே ஆறு ஆசனங்களை ஒரு கட்சி பெற்றால் அந்த கட்சி செயலாளர்/சுயேட்சை குழு தலைவர் முறையே தவிசாளர் உப தவிசாளர் பதவிகளை தெரிவு செய்யும் உரிமை உண்டு. அவர்கள் ஆட்சி அமைக்க போதுமான ஆசனங்கள் ஆறு ஆகும்.
பொதுவாக இக் கலப்பு தேர்தல் முறையில் தனியொரு கட்சி அல்லது சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மை பெறுவது என்பது பெரும்பாலும் சாத்தியமில்லை.
எனவே கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த வகையில் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் சிலவேளைகளில் 6 ஆசனங்களை யாரும் பெறவில்லை என்றால் அடுத்த தெரிவு முறைமைக்கு செல்ல வேண்டும்.
50வீதத்திற்குக் குறைவாக ஆசனங்களை பெற்றால் இரண்டு அல்லது மூன்று கட்சிகள்/சுயேட்சை குழுக்கள் கூடி கலந்துரையாடி ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி தவிசாளர் உப தவிசாளர் ஆகியோரை அவர்களுக்குள் தெரிவு செய்வார்கள் .
முதல் அமர்வில் அதிகாரம் அளிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை அலுவலர் முன்னிலையில் ஜனநாயக ரீதியாக அத் தெரிவு இடம்பெறும்போது அவற்றை முறைப்படி பிரேரித்து ஆமோதித்து தெரிவுகள் இடம்பெறும்.
தெரிவுகளில் இணக்கப்பாடு இல்லாவிட்டால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும். அது இரகசிய வாக்கெடுப்பா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பா? என்பது பற்றி சபையே முடிவு செய்யும். ஒருமித்த கருத்து வராவிட்டால் சிலவேளைகளில் அதற்கும் வாக்கெடுப்பு நடாத்த வேண்டி வரலாம்.
அந்த வாக்கெடுப்பில் 50 வீதத்திற்கும் கூடிய வாக்குகளை யார் பெறுகிறாரோ அவர் தவிசாளராவார். உப தவிசாளர் தெரிவும் அதே பாணியில் நடைபெறும்.
சிலவேளைகளில் வாக்கெடுப்பில் சரி சமனான வாக்குகளை இருவரும் பெற்றுவிட்டால் திருவுளச்சீட்டு குலுக்கல் முறையில் தெரிவு இடம்பெறும்.
இதில் அதிஷ்டம் கைகொடுக்கும் நபர் தவிசாளராவார்.
தெரிவான தவிசாளர் பிரதான சிம்மாசனத்திற்கு அழைக்கப்பட்டு சம்பிரதாய முறைப்படி அமர்த்தப்படுவார்.
அந்தளவில் அந்த அமர்வு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்படும்.
எதற்கும் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்