கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர்.
பல இடங்களில் சிறப்பு சேவையாற்றி வந்துள்ள வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் தற்போது வரலாற்று புகழ் மிக்க கல்முனை ஆதார வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளராக கடமையை ஏற்றுள்ளார்.
இதற்கு முன் கல்முனை பிராந்தியத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கொரோனா தொற்றுக்காலப் பகுதியில் இரவு பகல் பாராது கடமையாற்றி மக்களின் மனதிலும், வைத்தியத்துறையிலும் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
கல்முனை ஆதார வைத்திய சாலையில் பணிப்பாளராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தனது நிர்வாக கட்டுப்பாட்டினுள் சகல துறைகளையும் கொண்டு வருவதற்காக அதிகாரிகளுடனும், சேவையாளர்களுடனும் மிக நேர்த்தியாக கலந்துரையாடி மக்களுக்கான சேவையை இன்னும் சிறப்பிக்க வழி கோலி வருவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மக்களின் உடனான சிறந்த கருத்து பரிமாற்றத்திற்காகவும், வைத்தியசாலையின் சேவையின் பலனில் பொதுமக்கள் திருப்தி கொள்ளும் விதமாகவும் மாற்றுவதற்காக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கும் பாதுகாப்பு பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை தனது அனுபவங்களினூடாக வழங்கி வருவது மிகச் சிறந்த முதல் கட்ட நகர்வாக கருதப்படுகின்றது.
வைத்தியசாலையின் சேவைகளை மக்களுக்கான சேவையாக மாற்றியமைக்க பொறுப்பு உத்தியோகஸ்தர்களின் மனிதவலு, செயல்திறன் என்பன அவர்களின் பொறுப்பான பகுதிகளின் ஊடாக முழுமையாக பயன் படும் வகையில் ஒன்று கூடல்கள் அனைத்தும் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெறுவதை தவிர்த்து, சேவையாளர்களை நேர ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் விதத்தில் தயார்படுத்தி வருவதும் ஒரு சிறப்பு விடயம்.

ஏற்கனவே தனது சேவையின் சிறப்பை பதித்த பிரதேசம் என்பதனால் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், நலம்விரும்பிகள், பொது ஸ்தாபனங்களின் பொறுப்பாளர்கள், என பலரும் தாமாகவே முன்வந்து அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளுக்கு ஊக்கங்களையும் பங்களிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல் அடுத்த கட்ட நகர்விற்கான ஆயத்தங்களையும் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர் அவர்களின் செயற்பாடுகளில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக மக்கள் கருத்துகள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் நூற்றாண்டுகளை கடந்த பழைமிகு கல்முனை ஆதார வைத்தியசாலை மேலும் பல வளர்ச்சிப்படிகளையடைய கல்முனை நெற் ஊடக வலையமைப்பு பிறந்துள்ள புத்தாண்டில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது