(றியாஸ் ஆதம்,)

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1 கிலோமீற்றர் பிரதான பிரிவில், இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கே.ஜி.ஆர்.சமரகுமார இரண்டாம் இடத்தினையும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சொஹி மியாமொடோ மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு, அறுகம்பே அபிவிருத்தி போரம் தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி “ஒன்றாய் ஓடுவோம் ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த அரை மரதன் ஓட்டப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் இடம்பெற்றது.

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம்.எம்.முசாரப், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் எனச் சுமார் 500 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.