நூருல் ஹுதா உமர்
மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து தனி நகரசபையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மருதமுனைக்கான நகரசபை கோரிக்கையை முன்வைப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடியதாக அமையலாம்.
இவ்வாறான முக்கியமான சமூக மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட அதிகாரமுள்ள தரப்புகளுடன் கலந்துரையாட வேண்டிய பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் சமூக பிரமுகர்களை, அதிகாரமற்ற தரப்புகளிடம் அழைத்துச் செல்வது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
சமகால அரசியல் சூழல், சமூக ஒற்றுமை, சர்வதேச அரசியல் நிலைமைகள், அயல் சமூகங்களுடனான உறவுகள், பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகள், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வருமான மார்க்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து, கலந்தாலோசித்து, சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அவசர உணர்வில் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முஸ்லிம்களின் முகவெற்றிலையாக திகழும் கல்முனையை எதிர்காலத்தில் துண்டாடப்பட்டு திண்டாடும் நிலைக்கு தள்ளக்கூடும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
