(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதான வீதியில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்கு தொகுதிகளை புனரமைப்பு செய்து, புதிய மின் விளக்குகள் பொருத்தும் விஷேட வேலைத் திட்டப் பணிகள் கல்முனை மாநகர சபையினால் இன்று வியாழக்கிழமை (16) இரண்டாவது நாளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக இந்த விஷேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான நவீன ரக மின் உயர்த்தியைப் பயன்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னதாக கல்முனை சிறுவர் பூங்காவில் நீண்ட காலமாக ஒளிராமல்
செயலிழந்து காணப்பட்ட மின் விளக்கு தொகுதிகள் நேற்றைய தினம் மேற்படி மின் உயர்த்தியின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவ்வாறே சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதமுனை சிறுவர் பூங்கா என்பவற்றில் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்குத் தொகுதிகள் யாவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித நடவடிக்கையினால் புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, டாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களின் பிரதான வீதிகளில் செயலிழந்து காணப்படுகின்ற மெகா மின் விளக்கு தொகுதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.