தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க எப்படி அழைக்க முடியும்? பெரும்பான்மையை மட்டுமே நிருபிக்க வேண்டும்.
யார், யார் ஆதரவு என்னும் விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்களையும் அழைத்து வர வேண்டியதில்லை, என்றார்.
விஜய்க்கு அடுத்தபடியாக, அதிக தொகுதிகளை வென்றுள்ள அதிமுக, திமுக இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், அனுமதிப்பீர்களா? என்று தனியார் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘ பெரும்பான்மைக்குரிய ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன்.
பெரும்பான்மை ஆதரவு விபரத்தை கொடுத்தால், அவர்கள் சட்டசபையில் தங்களின் பெரும்பான்மையை நிருபித்தால் போதுமானது. அடுத்த 2 அல்லது 3 தினங்களில் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன்’ என்றார்
