- வி.ரி.சகாதேவராஜா–
பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தது மட்டக்களப்பு!
நெல்லிக்காட்டில் நடந்தது என்ன?
மட்டக்களப்பை அதிரச்செய்த சம்பவம்
24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி!
யார் இந்த ஐ.பி. மேனன்?
“அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார்.
மட்டக்களப்பை அதிரச்செய்து பரபரபாக்கிய சம்பவம் .
நகையை அபகரித்து பெண்களை கிணற்றுக்குள் போட்டு வந்த கும்பல் சிக்கிய கதை இது.
மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த சம்பவமாக, வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு கடந்த வியாழக்கிழமை (19) 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை(20), குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.இப்பெண் 28.02.2026 இல் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் CCTV காட்சிகளைப் பரிசோதித்தனர்.
இதன்போது குறித்த தாயை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அவருடன் இருந்த பெண் குறித்து தகவல்கள் கிடைத்தது.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு மறைந்திருந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவரது கணவரான 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன் மற்றும் அவரது தம்பியான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகியோர் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட கணவன் மனைவி, சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறுமூலையில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்குச் சென்று, பின்னர் ஆயித்தியமலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வவுணதீவு பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்னால் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாகக் கேட்டுள்ளனர். அவர் மட்டக்களப்பு நகருக்குப் போகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் தாங்களும் அங்கு செல்வதாகக் கூறி வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இளம் தாய் முச்சக்கரவண்டியில் போகப் பணம் இல்லை எனக் கூறியபோது 100 ரூபாய் தந்தால் போதும் எனத் தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளனர்.

அப்போது தான் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.
இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர், குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு செல்வதாகவும், உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்து அவர்களை மீண்டும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் குடிப்பதற்கு கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி குடித்ததையடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி தாண்டியடி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு வண்டி நிறுத்தப்பட்டபோது குறித்த பெண் இறங்கியுள்ளார். அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞன் முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட போது, மயக்கத்தில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடுமாறு கோரிய நிலையில் முற்றாக மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொள்ளையடித்துக் கொண்டு, குழந்தையைக் கொத்தியாபுலை வயல் பகுதியில் வீசி எறிந்துவிட்டு, மயக்கமடைந்த இளம் தாயைத் தாந்தாமலை பகுதியிலுள்ள நெல்லிக்காடு வயல் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளனர்.
அதேவேளை, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே முறையில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றுக்குள் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு இதே கும்பலால் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெல்லாவெளி பெண் ஒருவரை நகைகளை கழட்டி விட்டு அதே கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எது எப்படியோ 24 மணித்தியாலத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்த பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை பாராட்டப்பட்ட வேண்டும்.
அதற்கு கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான துணிச்சலான சாதூரியமான செயற்பாடே காரணமாகும்.
யார் இந்த IP மேனன்?
போலீஸ் பரிசோதகர்(IP) தெய்வநாயகம் மேனன் காரைதீவைச் சேர்ந்தவர். இவர் 1987இல் பிறந்தவர்.
4 ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பேர் கொண்ட தெய்வநாயகம் குடும்பத்தில் இளையவராக பிறந்தவர் .
இவர் காரைதீவு சண்முக மகா வித்யாலயம், விபுலானந்த மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர் தரம் வரை கல்வி கற்று 2012 ஆம் ஆண்டு உப போலீஸ் பரிசோதராக போலீஸ் சேவையில் இணைந்தார் .
அவர் வாழைச்சேனை, யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள பொலீஸ் நிலையங்களில் சேவையாற்றினார்.
2020இல் போலீஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றார். 2025 இல் கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையை ஏற்று பல சம்பவங்களை துணிச்சலுடன் போராடி கண்டுபிடித்து சமூக நீதியை நிலைநாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பொழுது நெடுந்தீவு பகுதியில் நடந்த 6 பேர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இதே பாணியில் அதிரடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினார்.
இவ்வாறு
பொலிஸ் திணைக்களத்துக்கு பெருமை சேர்த்த இளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன், கடந்த வாரம் மட்டக்களப்பிலே இடம்பெற்ற பாழ்ங்கிணறு படுகொலை சம்பவத்தையும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் ஐவரையும் கைது செய்து பொலீஸ் சேவைக்கு பெருமை சேர்த்தார்.
இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவரிடம் கேட்டபோது “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” என அடக்கமாக பதிலளித்தார்.
பிந்திய தகவல்கள்;
கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களில் மூவர் கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
நகைக்கடை உரிமையாளர்கள் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை புதன்(25) அன்று அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலம் உடற்கூற்றியல் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
அதேபோன்று சந்தேகநபர்களை அவர்கள் பிரதேசத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை நள்ளிரவு சந்தேக நபர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில் அங்கு மயக்க மருந்து போத்தல்கள் மற்றும் குளிசைகளையும் பொலிசார் மீட்டெடுத்தனர் .
கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான விசேட போலீஸ் குழுவினர், கொக்கட்டிச்சோலை போலீஸ் நிலையத்திலிருந்து, நேற்று நள்ளிரவு சந்தேகநபர் இருவரையும் , அவர்களது காஞ்சிரன்குடா இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மயக்கமருந்து போத்தல்களையும் குளிசைகளையும் மீட்டெடுத்தனர் .
அத்துடன் இந்த மயக்கமருந்து இன்னுமொரு ஆட்டோ சாரதிக்கும் வழங்கியதாக சந்தேகநபர்கள் குறிப்பிட்டனர் . அதனையடுத்து கொக்கட்டிச்சோலையிலுள்ள குறித்த ஆட்டோ சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .
குறித்த மயக்க மருந்து எங்கிருந்து பெறப்பட்டது என்பது தொடர்பாக பொலிசார் திவீரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந் நிலையில் மேலும் சிலர் சிக்கலாம் என தெரிகிறது.
இன்று வெள்ளிக்கிழமை அனைத்து ஐந்து சந்தேக நபர்களும் நீதிமன்றங்களுக்கு ஆஜர் செய்யப்பட்டனர்.
இதேவேளை கிணற்றிலிருந்து உயிரோடு மீட்ட தாயும் பிள்ளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல்நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் .
இதேவேளை, சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
எது எப்படியோ நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
