(வி.ரி.சகாதேவராஜா, செ.பேரின்பராஜா)

தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தினை மக்கள் மயப்படுத்தும் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில் வரையும் அண்ணன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்  தலைமையில் இடம்பெற்ற   ” கிராம யாத்திரையின் ” போது உணர்வு பூர்வமான ஊடகப் பணியை மேற்கொண்ட பெருமை நண்பர் சலீமை சாரும்.

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகருமான செல்லையா இராசையா புகழாரம் சூடினார்.

அகில இலங்கை அரசாங்க பொது 

ஊழியர் சங்கம் காரைதீவில் உள்ள இச் சங்கத்தின் தலைமைப் பணிமனையில் நடாத்திய ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் “வாழ்வும் பணியும் ” எனும் நினைவேந்தல் நிகழ்வு இச் சங்கத் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் 28.03.2026 சனிக்கிழமை  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா அங்கு மேலும் பேசுகையில்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அன்றைய செயலதிபர் அண்ணன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த கிராம யாத்திரையின் போது நான் தமிழ் இளைஞர் பேரவையின் காரைதீவுக்கான தலைவராகவிருந்தேன். அன்று மாவை சேனாதிராசா,  கவிஞர் காசி ஆனந்தன்,  வண்ணை ஆனந்தன்,  கோவை மகேசன், வேல்முருகு மாஸ்ரர், எம். எச்.எம் அஷ்ரஃப் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்) ,  மண்டூர் மகேந்திரன், சட்டத்தரணி சிவபாலன், எல்லைக் காவலன்  கு.ஏகாம்பரம்,  பன்னீச்செல்வம், கதிர்காமத்தம்பி,   காரைதீவு தாடிக் குருக்ககள், போன்றோருடன் சலீமும் ஒருவராகவே இருந்தார்.

கால ஓட்டத்தினூடே அம்பாறை மாவட்த்தில் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல தடவைகளில்  தமிழ் – முஸ்லிம் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்ற தருணங்களில் இரு சமூகங்களையும் சமாதானம் செய்யும் சமாதானத் தூதராக அன்னாரும் , அவரது சகோதரனான கல்வியதிகாரி ஏ.எல்.எம்.அமீனும்  ஆற்றிய பணியை இலகுவில்  எவரும் மறக்க முடியாது.

தமிழினத்தின் விடுதலைக்கான உரிமைப் போராட்டம் ஆயுத வழியில் முன்னெடுக்கப்பட்ட தருணங்களில் இப் போராட்டத்தின் நியாயத் தன்மையையும்,  தமிழ் மக்களின் வலிகளையும் துணிச்சலுடன் ஊடக தர்மம் காத்து உயிர்ப்புடன் எழுதிய ஊடக விருட்சம் சலீம் என்றால் மிகையாகாது. இதனை தமிழினத் தலைவர்கள் பகிரங்கமாக பொது வெளியில் கூறியுள்ளனர்.

இதே போன்று முஸ்லிம் மக்களின் பெருந் தலைவரான எ.எச்.எம். அஷ்ரஃப், வேதாந்தி சேகு இஸ்ஸத்தீன் போன்றவர்களுடன் இணைந்து அன்னார் முஸ்லிம் தேசிய விடுதலைக்காக உழைத்த பணி ஏராளம்.

குறிப்பாக தென் கிழக்கு பல்கலைக் கழகம் நிறுவுவதற்கான அன்னாரின் ஊடக அறிக்கைகள் ஆய்வுக் கட்டுரைகள், களப் பணிகள்  வீச்சானவை. இதன் வளர்ச்சியில் இறுதி மூச்சுவரை பயணித்த ஊடகச் செம்மல்.

இவரின் உயரிய பணிக்காக இப் பல்கலைக் கழகம் எதிர்காலத்திலாவது அன்னாருக்கு  கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க வேண்டுமென்பது எனது தயவான வேண்டுகோள் ஆகும்.

மேலும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பணியை வலுவுள்ளதாக்க வடக்கு கிழக்கில் எம்முடன் அயராது உழைத்த பெருமக

ன் சலீம் என்றால் மிகையில்லை என்றார்.

இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாபாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராசா,  சிரேஸ்ட சட்டத்ததரணி எப்.எம் அன்சார் மௌலானா, சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை அதிபருமான செல்லையா பேரின்பராசா இலங்கை உயர் தேசிய  கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹீசைன் முபாறக்  உட்பட இத் தொழிற் சங்க பிரதிநிகள் உரையாற்றினர்.