ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

​ஈரானுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமாக” இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடி அல்லது மறைமுகமான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள அந்த அதிகாரி, “மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்களது தாக்குதல் இலக்குகளில் அடங்கும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, அவர் (ட்ரம்ப்) தற்போது பின்வாங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் சூழலில் பெரும் குழப்பமும் பரபரப்பும் நிலவி வருகின்றது.