-சௌவியதாசன்-

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது.

ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய இயற்கை நிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மன அமைதியின் ஓருமைப்பாட்டிற்கு இயற்கைச் சூழல் அவசியமாகின்றது. பல்சமய கலாசாரம் கொண்ட இலங்கைச் சமூகத்தினரிடையே வழிபாட்டு ரீதியில் இரு இன மக்களை ஒன்றிணைக்கின்றது.

இயற்கைச் சூழலில் உகந்தை முருகன் அமைந்துள்ளமை ஆலயத்திற்குள்ள சிறப்பாகும். அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்க கடலை அண்டியும் காணப்படும் இவ் ஆலயத்தின் திருவிழா கதிர்காம திருவிழா காலத்தை ஒட்டியே நடைபெறும்.


கதிர்காமத்துக்கு பாத யாத்திரை செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இவ் ஆலயத்தை சூழ இயற்கையாக காணப்படும் மர நிழல்களில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து செல்வார்கள். ஆலயத்தை சூழ விருட்சமாக வெள்ளை நாவல் மரங்கள்,வேப்பை மரங்கள் அதோடு மேலும் பல்வேறு வகை மரங்களும் ஆலயத்திற்கு அழகு சேர்த்தது.

இன்றைய நிலை இவ்வாறு ஆலயத்திற்கு அழகு சேர்த்த மரங்களில் சுமார் இருபதுக்கு மேற்பட்ட வேப்பை மரங்கள் முளுமையாக இறந்துபோய் (பட்டுப்போய்) காணப்படுகிறது. இது இயற்கை வளம் அழிந்து வருவதை யாருக்கும் உணர்த்தவில்லையா?


இவ்வளவு மரங்கள் அழிந்து வரும் நிலையில் அங்குள்ள வன அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா? குரங்குகள் வேப்பை மரத்தின் துளீர்களை உண்பதால் மரங்களெல்லாம் பட்டுப்போவதாக ஆலய வண்ணக்கர் காரணத்தை கூறினாலும் சாதாரணமாக இதனை கடந்து செல்ல முடியாது.


ஆலயத்தின் சூழல் என்பதையும் தாண்டி எமது நாட்டின் இயற்கை வளம் அழிவடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.