மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ;
உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு !
( உமிரியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
மின்சாரம் இல்லாத நிலைமையை அறிந்த யானைகள் மின்சார வேலியைத் தாண்டி நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளைகளை துவம்சம் செய்து உள்ளன.
இச் சம்பவம் நேற்று (2)இரவு இடம்பெற்றுள்ளது.
யானைகளுக்காக போடப்பட்டிருந்த மின்சார வேலிகளில் சமகால மின்சாரம் இல்லாத நிலையில் வேலிகளில் மின் இல்லை. அதனை இந்த யானைகள் பயன்படுத்தி உள்ளன.
உமிரிப் பகுதியில் உள்ள லண்டன் அ.சிவகுமார் ( காரைதீவு)மற்றும் பேராசிரியர் எஸ். குணபாலன்( தம்பிலுவில் ) ஆகியோரது தோட்டங்களில் இருந்த சுமார் 300 தென்னம் பிள்ளைகள் குருத்து எடுத்து வீழ்த்தி அழிக்கப்பட்டுள்ளன. பெரிய மரங்களும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
யானைகளால் மின்சார வேலிகளும் ஏனைய கொங்கிறீட் தூண் வேலிகளும் சேதம் அடைந்துள்ளன.
தென்னந் தோட்ட உரிமையாளர்கள் நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பொழுது அதிர்ச்சி அடைந்தார்கள்.
பல லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இந்த யானைகளின் அட்டகாசங்கள் பற்றிய முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இரவானதும் மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.









