அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
35 வருட கால பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். அப்துல் மலீக், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கோமாரி வெளிச்ச வீடு கடற்கரை விடுதியில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவரான கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது அப்துல் மலீக் அவர்களின் உன்னத சேவைகள் மற்றும் அவரது ஆற்றல், ஆளுமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, புகழாரம் சூட்டப்பட்டதுடன் நினைவு விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
ஓய்வு பெறும்போது இவர் பொத்துவில் பிரதேசத்திற்கான மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றி வந்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரான அப்துல் மலீக், தற்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் பொருளாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
