கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!
சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..
( வி.ரி. சகாதேவராஜா)
சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.
இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலினுடையது எனத் தெரிகிறது.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் சவுக்கடி கடல் பகுதியில் சம்பவித்துள்ளது.
காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரு படகுகளே இவ்விதம் விபத்துக்குள்ளானது.
இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் தெய்வாதீனமாக பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளளனர்.
எனினும் அவர்களில் ஒருவருக்கு காலில் பலத்த வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்தது
அவர்கள் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்துக்குள்ளாகிய படகுகளை மீட்க உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்ட போதிலும், பலத்த அலை நீரோட்டம் கொந்தளிப்பு காரணமாக அவை கரைதட்டின.
இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையிலையே அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தது.
அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது.
குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் போலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த போலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.
விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.






