அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

( வி.ரி. சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15)  தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது.

இதன்காரணமாக  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெய்துவரும் கடும் மழை காரணமாக  நகரங்களின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான குறிப்பாக கிட்டங்கி காரைதீவு போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த 11.11 2025  உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை,  இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் தாழமுக்கம்

நேற்றைய தினம் வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, தற்போது இலங்கையின் கிழக்காக காணப்படுகின்றது. 

இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

இந்த தாழமுக்க பகுதியானது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் தெற்காக – குமரிக்கடல் வழியாக – அரபிக் கடல் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் இதேபோன்று இம்மாத இறுதிவரை மேலும் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருக்கின்றது.

எதிர்வரும் 20ஆம் திகதியளவில் உருவாக இருக்கின்ற இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப் பகுதியினுள் பெரும்பாலும் ஒரு சூறாவளியாக ஒரு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் (15.11.2025)  இலங்கையில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பிரதேசத்தில் 61.4mm மழை வீழ்ச்சியும்,

அது கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை பிரதேசத்திலும் 32.1c வெப்பநிலையும், 

அதை குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா பிரதேசத்திலும் 12.0c வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.