( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.

தமிழ் மக்கள் அங்கிருந்ததை சான்றுப்படுத்தும் ஒரே ஆதாரமாக அங்கு இன்றும் அந்த பழம்பெரும் முருகன் ஆலயம் பராமரிப்பின்றி இருக்கிறது.

இன்று தமிழரே இல்லாத பெரும்பான்மையினர் மாத்திரமே உள்ள இடத்தில் உள்ள குறித்த முருகன் ஆலயத்தை கவனிப்பார்களா? என்று உலக இந்துக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வளத்தாப்பிட்டி சமூக செயற்பாட்டாளர் காந்தன் கூறுகையில்..

 இன்று இவ்வாலயம் காணப்படும் நிலை நம் கண்களில் கண்ணீரை வரவைக்கின்றது. இன்று எம்மவர்கள் கோபுரத்துக்கு மேல் இன்னும் ஏதாவது கட்டலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றார்களே தவிர இவ்வாறு எம் இனத்தின் அடையாளங்களை பறைசாற்றும் முழுமையான சிங்களவர்கள் மாத்திரம் காணப்படும் இவ்வாறான பிரதேசத்தில் காணப்படும் ஆலயங்களுக்கு தம்மால் முடிந்த பங்களிப்பினை வழங்கி அவற்றை புத்துயிர் பெறசெய்வதற்கு முன்வராமல் இருப்பது வேதனையான விடயம் .

பேரன்புக்குரிய முருகப்பெருமானின் மெய்யடியார்களே இனியும் தாமதிக்காமல் எம்முப்பாட்டன் தமிழர்களின் தலைமகனின் ஆலயத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்.

தற்போது  பராமரிப்பு முதல் பூசைகள் வரை சிவஸ்ரீ.துரையப்பா மதன் சர்மா  அவ்வப்போது அவரால் முடிந்தவரை நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.