நேற்றையதினம் (22)தங்காலை பிரதேசத்தில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை, சீனிமோதர பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீடொன்றில், உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள பழைய வீடொன்றை வாங்கிய நபர் ஒருவர் அதன் சுற்று மதிலைக் நிர்மாணித்து பல நாட்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டைப் புனரமைக்கும் பணிகளுக்கு 3 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் மது அருந்தியிருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தமது மகன்களுக்கு அறிவித்துள்ளார். அவர்கள் வந்து தமது தந்தையை தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்றை பொலிஸார் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். குறித்த லொறியில் பழங்கள் ஏற்றுவதாக தெரிவித்த போதிலும் அதன் வெளித்தோற்ற பரிமாணத்தை விட அதன் உள்தோற்றம் சிறிதாக இருந்ததை அவதானித்த பொலிஸார் அதனை ஆழமாக சோதித்துள்ளனர். இதன்போது அதிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேற்படி வீட்டில் காணப்பட்ட இதே மாதிரியான லொறிகள் இரண்டையும் இதேபோன்று சோதிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய அங்கிருந்த 2 லொறிகளில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த, தங்காலை விதாரந்தெனியவைச் சேர்ந்த 50 வயதுடைய துசித குமார என்பவரின் இரண்டு மகன்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் சந்தேகநபர்களின் தந்தையின் மரணம் குறித்து சந்தேகநபர்கள் தங்காலை பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் அந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வீட்டிற்குச் நேற்று சென்றிருந்தனர்.

இதன்போதே அந்த வீட்டின் ஒரு அறையில் மேலும் இரண்டு சடலங்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்ததுடன் அங்கு 3 லொறிகளில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் சம்பவம் தொடர்பில் லொறிகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதன் மூன்று உரிமையாளர்களும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.