சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்!
நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்!
( வி.ரி.சகாதேவராஜா)
“சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி நேரில் சென்று நேற்று (17) பார்வையிட்டார்.
கண்சார்ந்த நோய்களை குணமாக்க இலவசமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தினால் செப்டம்பர் 15 முதல் 21 ஆம் திகதி வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அங்கு உரையாற்றுகையில்..
மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பஸர் சர்வதேச அமைப்பு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த. பிரபாஷங்கர் உரையாற்றுகையில்,
இலங்கைக்கு வழங்கப்பட்ட இம்மனிதாபிமான உதவிக்காக சவூதி அரசின் தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
அவ்வாறே, செப்டம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை, சவூதி நூர் திட்டத்தின் அடுத்த கட்ட முகாம் எம்பிலிபிடிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.




