தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில்.

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த (23.08.2025) அன்று வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (27.08.2025) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொது மக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம் எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் இது எமது மக்களுக்கு இழைக்கப்பட அநீதிகளுக்கும் செம்மணி போன்ற அவலங்களுக்கும் வீரமுனை,திராய்க்கேணி,உடும்பன்குளம்,கல்முனை,காரைதீவு போன்ற பல இடங்களிலும் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கும்,தமிழர் மீதான அடக்குமுறைகளுக்கும் சர்வதேச நீதிப் பொறுமுறைகள்தான் பொருத்தமானது எனவே எமது மக்களும் அதைத்தான் கோருகிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் கையெழுத்துகளுடன் ஐ.நா மன்றத்திற்கு அனுப்புவதற்கான இந்த கையெழுத்துப் போராட்டம் எனவும் கூறினார்.