கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை பொலிஸார் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
வியாபார பொருட்கள் மற்றும் வியாபார தளங்களின் விளம்பர பலகைகளை வீதிகளில் வைத்தல், வாகனங்களை நீண்ட நேரமாக வீதிகளில் நிறுத்தி வைத்தலும் மற்றும் திருத்த வேலை செய்தலும், உணவுப் பொருட்களையும் மற்றும் பழ வகைகளையும் பாதுகாப்பற்ற முறையிலும், திறந்த நிலையிலும் விற்பனை செய்தல், கால் நடைகளை பாதுகாப்பற்ற நிலையில் வீதிகளில் நடமாடவிடல், கழிவு நீர்களை வீதிகளில் விடுதல் போன்ற இவ்வாறான குற்ற செயல்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் பொதுமக்கள் பலவகையான சிரமங்களை எதிர் கொள்கின்றார்கள். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் சிரமங்கள், அசௌகரியங்களிலிருந்தும் பயணிப்பதற்கு உதவுமாறு வியாபாரிகளாகிய உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறான தகவல்களை தாங்களே இனங்கண்டு குறித்த குற்றங்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் தொடர்ச்சியாக இவ்வாறான விடயங்களை மேற் கொள்பவர்களுக்கு எதிராக 2025.08.15 ஆம் திகதிக்கு பின்னர் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனையும் அறியத் தருகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்
தற்போது நமது நாட்டில் களவு, கொள்ளைகள் இடம் பெறுவதைத் தடுப்பதற்காக தங்களின் பாதுகாப்புக்கு என தங்களது வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டீவி கேமராக்களை உரிய முறையில் செயற்படுதா என்பதனையும் பரீட்சித்து நடைமுறையில் வைத்து கொள்ளுமாறும் தங்களை வேண்டிக் கொள்கின்றோம் என கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
