மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத லன்ச் ஷீட் உற்பத்தி தொழிற்சாலையில், கடந்த ஜூலை 2 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையில் இந்த லன்ச் ஷீட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபை தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை, சுற்றுச்சூழல் அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, மற்றும் தொழில் அமைச்சு உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் இணைந்து, பிளாஸ்டிக்கினால் சமூகத்திற்கு ஏற்படும் பேரழிவு குறித்து கவனம் செலுத்தி, சட்டவிரோத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமல்படுத்துவதற்கு செயல் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றன.
அதன்படி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, சட்ட சிக்கல்களைத் தவிர்க்குமாறும், சமூகப் பொறுப்புணர்வு கருதி இத்தகைய பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது