புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்

மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

07.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலை, தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின் மருத்துவ அதிகாரி Dr. E. உதயகுமார் ஒருங்கிணைத்திருந்தார்.

இதில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் Dr. கே. மோகனகுமார், புற்றுநோயியல் நிபுணர் Dr. ஏ. இக்பால், புற்றுநோய் சங்கத்தின் தலைவர் Dr. கே.இ. கருணாகரன், மருத்துவ பீடப் பேராசிரியர் Dr. கே. அருளானந்தம், ஓன்கோ அறுவை சிகிச்சை நிபுணர் Dr. ஜி.ஏ. மாலிங்க கல்லக, அறுவை சிகிச்சை நிபுணர் Dr. நுவானி மனபெருமா, இளையவியல் விசேட நிபுணர் Dr. எஸ். அகிலன், கதிரியக்க நிபுணர் Dr. என். நிமோஜன், உட்பட, புற்றுநோய் சங்கத்தினர், ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் புற்றுநோய்க்கு ஆதரவளிக்கும் அரசு, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் புற்றுநோய் தொடர்பான தரவுகளை சீராகப் பெறுவதற்கும் தொடர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஒரு மென்பொருள் (software) உருவாக்கப்பட வேண்டிய அவசியம் கூறப்பட்டது. விழிப்புணர்வை அதிகரிக்கவும் நோயாளிகள் சுலபமாக அணுகக்கூடிய முறைகளை ஏற்படுத்தவும் மென்பொருள் உதவுமென்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் புற்றுநோயுக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதுபற்றியும் விவாதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்தியத்தில் மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், கருப்பைக்கழுத்துப் புற்றுநோய், தைரொயிட் புற்றுநோய் ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகள், நோய் தீவிரமடைந்தபின்னரே சிகிச்சைக்காக வருகின்றனர் என்பது கவலையளிக்கக்கூடிய நிலை எனக் குறிப்பிடப்பட்டது.

சாரதிகள், விவசாயிகள், மீனவர்கள் மத்தியில் வாய்ப்புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவதையும், இந்தக் குழுவை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதையும் நிபுணர்கள் வலியுறுத்தினர்.

பெண் கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்களின் (Female Radiographer) பற்றாக்குறை காரணமாக Mammogram பரிசோதனைகள் மேற்கொள்ள முடியாமை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

மேற்படி உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் பற்றி அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல்கள், புற்நோய் சிகிச்சைச் சவால்கள் குறித்து தொடர்ச்சியாக ஆலோசிக்க வழிவகுக்கும் என்றும், இவை பிராந்தியத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தும் முக்கியமான ஒரு முயற்சியாக விளங்கும் எனக் கருதப்படுகின்றது.