சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்-

(நன்றி ஞாயிறு தமிழன்)

யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் பிறந்த நாள் நாளை (2024 யூன்,25) அவர் உயிருடன் இருந்திருந்தால் 62,வயதாகும்,
ஆனால் அவரை திட்டமிட்டு சிங்கள பேரினவாதம் கடந்த 2006, நவம்பர்,10, ம் திகதி 44, அகவையில் கொழும்பு தலைநகரில் மகிந்தராசபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சோகம் அரங்கேறியது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். மனைவியாக சஷிகலா அவர்களை திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாக வாழ்ந்தார். இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் தமிழ்தேசிய பற்றுறிதியுடன் திகழ்ந்தார். தாம் கொண்ட கொள்கையை இறக்கும் வரை இதயத்தில் சுமந்து அரசியல் பணி புரிந்தவர்.
அவரின் அரசியல் பயணமும், அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு காலத்தால் அழியாத கலங்கரை விளக்காக விளங்குகின்றன.

நேர்மையும், தைரியமும், மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காக அவர் கொண்டிருந்த இதய பூர்வமான அர்ப்பணிப்பும், எவரையும் மதிக்கும் சுபாவமும், தனது உறுதியான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடும்போது அவர் பேணும் அரசியல் நாகரிகமும், அரசில் களத்தில் வேறுபடுத்தி இனம் காண்பிக்கும் ஆளுமைமிக்க தலைவராக அவரை மாற்றியிருந்தன.

இலங்கை அரசியல் வரலாற்றில் வடகிழக்கு எட்டுமாவட்டங்களில் இருந்து ஒரு கட்சியை சேர்ந்த 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட சரித்திரம் முதலாவதும், கடைசியும் 2004,ம் ஆண்டுதான் இனி அப்படியொரு தெரிவு வருமா என்பது சந்தேகம்தான்.

அதனால் கண்பட்டது போல் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்டதும் அதே 2004, தொடக்கம் 2010 வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.
வேறு எந்த கட்சிக்கும் இல்லாத இன்னல்களையும், படுகொலைகளையும், அச்சுறுத்தல்களையும், உறவினர்களை கடத்திய சம்பவங்களையும் சந்தித்த கட்சியும் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான்.
இன்று உள்ளதுபோல் அன்று படம்காட்டி அரசியல் செய்யும் காலமாக இருக்கவில்லை உயிரை பணயம் வைத்தே அப்போதய காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர்.

2004, காலப்பகுதியில் 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் மாமனிதர் ரவிராஜ் அவர்களும் எங்களுடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் 2004, ல் தேர்தல் இடம்பெறுவதற்கு மூன்று வாரத்துக்கு முன்னமே இந்த சதியால் விடுதலைப்புலிகளுக்குள் பிழவு ஏற்பட்டு அதில் இருந்து கருணாவும்,சிலரும் விலகி கிழக்கில் பிரதேசவாத அரசியலுடன் தமிழ்தேசிய அரசியலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களாக இவர்களை பயன்படுத்தி ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் படுகொலைகளும் இடம்பெற்றமையால் 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் கொழும்பில் ஜெயவர்தன புர பாராளுமன்ற உறுப்பினர் விடுதி அமைந்த மாதிவெலயில் தங்கியிருந்த காலமாகும்.

விடுதலைப்புலிகள் பிரிவுக்கு தாமே காரணம் என அப்போது பிரதமராக இருந்த ரணில் உரிமை கோரியிருந்தார் அவரே பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது “விடுதலைப்புலிகளின்தளபதியாக இருந்த கருணாவை 2004ல் ஏறாவூர் பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாமூலமாக பிரித்தமையை பெருமையாக ஒருதடவை கூறியும் இருந்தார்”

இந்த காலத்தில்தான் முதலாவது இலக்கு 2005,டிசம்பர்.25, ல் கொழும்பில் இருந்து மட்டகளப்புக்கு நத்தார் நள்ளிரவு ஆராதனைக்காக அவரின் இல்லத்தில் மதியம் செனற மானிதர் ஜோசப்பரராசிங்கமும் அவரின் பாரியார் சுகுணமும் அன்று இரவு புனித மரியாள் தேவாலயத்தில் சென்று நத்தார் ஆராதனையில் ஈடுபட்ட சமயம் அவர் கொலைசெய்யப்பட்டும், மனைவி சுகுணம் படுகாயம் அடைந்ததும் வரலாறு.

மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தின் படுகொலைக்குப்பின்னர் தமிழ்தேசிக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலரும் சுடப்பட்டும் கடத்தி கப்பம் வாங்கிய சம்பவங்களும் பரவலாக இடம்பெற்றன. இந்த சம்பவங்களால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் அச்சநிலை ஏற்பட்டது எவருமே சுதந்திரமாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் கொழும்பிலும்,ஜெயவர்தனபுர கொட்டே மாதிவெல விடுதியிலும் முடக்கப்பட்டிருந்தோம்.

அந்தவேளையில்தான் 2006,யூலை மாதம் திருகோணமலை மாவிலையாற்றில் இராணுத்திற்கும் விடுதலைபுலிகளுக்கும்இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பூர் மூதூர் பகுதிமக்கள் எங்கும் விமானக்குண்டுத்தாக்குதங்களும், எறிகணைத்தாக்குதல்களும் இராணுவத்தினரால் அரங்கேறிக்கொண்டிருந்தன இதனால் அந்த பகுதிமக்கள் வெருகல் வாவியை கடந்து அப்போது பாலம் இருக்கவில்லை மட்டக்களப்பு வாகரையில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இவ்வாறு வாகரைப்பகுதியில் அகதி முகாம்களில் இருந்த பொதுமக்கள் மீது 2006,நவம்பர் 8,ம் திகதி இராணுவம் மேற்கொண்ட எறிகணை்தாக்குதலால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர், வாகரைப்பிரதேசமே அல்லோலப்பட்டது.

அப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22,பேரும் சம்மந்தன் ஐயா தலஐயில் கொழும்பு நகர் பகுதியி. அமைந்திருந்த சர்வதேச ஐநா செயலகத்திற்கு முன்பாக மறுநாள் 2006,நவம்பர்,9ம் திகதி காலை 9, மணிக்கு ஒரு கவன ஈர்ப்புபோராட்டத்தை நடத்தினோம். இந்தப்போராட்டத்தை ஒழுங்கு செய்தவர் மாமனிதர் ரவிராஜ்தான். அந்தப்போராட்டத்தின் முக்கிய நோக்கமே மட்டக்களப்பு வாகரையில் இராணுவம் மேற்கொண்டதாக்குதலை கண்டித்தும் உடனே போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது அதில் 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் பங்குபற்றினோம்.

இந்தப்போராட்டம் இடம்பெற்று நாம் கலைந்து செல்லும்போது மாமனிதர் ரவிராஜ் என்னிடம் கூறினார் “ மச்சான் நாளை நானும் நீரும் வாகரைக்கு போவோம் எவரிடமும் கூறாமல் திடிரென அங்கு சென்று உயிர் இழந்த மக்களையும் காயப்பட்ட மக்களையும் நேரடியாக பார்த்து வருவோம்.அதன் உண்மைகளை பாராளுமன்றத்தில் அறிக்கையாக கொடுக்கலாம் எதற்கும் நான் நாளை காலை 9, மணிக்கு மாதிவெல விடுதிக்கு வருவேன் நீ ஆயத்தமாக இரு எனது வாகனத்தை மட்டும் கொண்டு செல்வோம் உனது வாகனம் உனது பொலிசார் தேவையில்லை என கூறினார்”

நானும் உடனே சம்மதித்து மறுநாள் வாகரை செல்வதற்காக 2006, நவம்பர், 10, ம் திகதி தயாராக இருந்தேன். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட2006, நவம்பர்,10,ம் திகதி காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை “தெரண” சிங்கள தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் வழங்கியிருந்தார் அதுதான் அவர் இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.
அந்த நேர்காணலை முடித்து விட்டு திரும்பவும் அவருடைய வீட்டில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டில் சென்று மீண்டும் அங்கிருந்து மட்டக்களப்பு வாகரைக்கு செல்வதற்காக அவரது சிவப்பு நிற ஜீப் வண்டியில் என்னையும் அழைத்து செல்வதற்காக ஶ்ரீ ஜெயவர்தனபுர மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்கு வரும்போதுதான் 2006, நவம்பர் ,10, வெள்ளிக்கிழமை காலை 8. 15, மணியளவில் அவர்மீது மீது கொலைகாற கும்பல்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொலைசெய்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் என கூறப்பட்டது. பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

அவர் சுடுபட்டது எனக்கு தெரியவில்லை நான் எனது தொலைபேசியில் அவருடைய தொலைபேசிக்கு 8,45, மணியளவில் அழைப்பு எடுத்தேன் தொலைபேசியில் அழைப்பு சென்றது ஆனால்அவர் எடுக்கவில்லை. வாகனத்தில் வருகிறார்கள் என எண்ணியிருந்தேன்
பின்னர் 9,30, மணிக்கு வீரகேசரி ஊடகத்தில் இருந்து செய்தியாளர் ஒருவர் ரவிராஜ் சுடப்பட்டு இறந்த செய்தி எனக்கு கிடைத்தது செய்வதறியாது திகைத்து ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துவிட்டு நானும் அம்பாறை மாவட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த க. பத்மநாதன்(இப்போது அவரும் இயற்கை எய்திவிட்டார்) கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றிருந்தோம்.அங்கு ஏனைய பாராளு
மன்ற உறுப்பினர்கள் சிலரும் வந்திருந்தனர்.
அவருடைய வித்துடலை அவர் வசித்த கொழும்பு நாரயன்பிட்டி இல்லத்தில் வைத்து மறுநாள் கவழும்பு கனத்த மயானத்திற்கு அண்மையில் உள்ள மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படது.

பின்னர் மாமனிதர் ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை 2006, நவம்பர்,13, ல் பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணியில் அனைத்து மூன்று இன மக்களும் வேறுபாடுகள் இன்றி அரசியல், மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய இறுதி நல்லடக்கத்தில் கொழும்பு தலைநகரில் இனமத வேறுபாடுகள் இன்றி மூன்று இனத்தவர்களும் பாகுபாடுகள் இன்றி கலந்துகொண்டதும் ரவிராஜ் அவர்களின் இறுதிச்சடங்கே என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய வித்துடலை வன்னிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எம்மால் எடுக்கப்பட்ட போதும் பாதுகாப்பு தரப்பும், ஜனாதிபதி மகிந்தராஷபக்சவின் அரசும் அனுமதி தரவில்லை அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டு கொழும்பு கனத்த மயானத்தில் இறுதி நல்லடக்கம் இடம்பெற்றது.

எனினும் விடுதலைப்புலிகளின் பிரபாகரன் அவர்களால் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். அவருடைய அந்த அறிக்கையில்

“ நடராசா ரவிராஜ் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான குண இயல்புகளைக்கொண்டவர், பந்த பாசங்களுக்கு அடிமைப்பட்டு பொருள் உலகால் ஆட்டிப்படைக்கும் ஒரு பொம்மை மனிதரல்ல அவர் தமிழீழ மக்கள் மீதும், மண்மீதும் ஆழமான பற்றும் பாசமும் கொண்டவர்” என அறிக்கையில் குறிப்பிட்டு மாமனிதர் மதிப்பை வழங்கி இருந்தார்.

உண்மையில் துடிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடன் பயனித்த காலத்தை மறுக்கமுடியாது தனக்கு வாக்களித்த யாழ்மாவட்ட மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு இன ஒற்றுமையை மனதில் கொண்டு போராடிய ஒரு தலைவரே மாமனிதர் ரவிராஜ்.

தனது மக்களின் விடிவிற்காக தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த ஒரு தலைவர் மத்தியில் இன்று தங்களுடைய தங்களுடைய சுய நலனுக்காக நடிப்பு அரசியல் செய்து வாக்கு வங்கிகளையும் நிரப்பும் நோக்கில் செயற்படும் தமிழ்தேசிய அரசியல் வாதிகள் கட்சியின் தலைவர்கள் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணத்திலிருந்து இருந்து பெற வேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.

மாமனிதர் ரவிராஜ் அவர்களிடம் நாம் கண்ட துணிச்சலையோ இதயசுத்தியான நடத்தையையோ நேர்மையையோ எந்த தமிழ்தேசியகட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடமோ, அதன் தலைவர்களிடமோ நாம் எதிர்பார்க்கமுடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் இன்று இருந்திருந்தால் 17, வது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு எந்த இடையூறுகள், குத்து வெட்டுகள் இன்றி தலைவர் தெரிவு வாக்கெடுப்பு இன்றி அவரே தலைவராக பேராதரவுடன் தெரிவாகி இருப்பார்.

இன்று தமிழரசுக்கட்சியை நீதிமன்றில் நிறுத்திய நிலைமை அவர் இருந்திருப்பின் ஏற்பட்டிருக்காது. தமிழ்தேசிய அரசியல் செயற்பாடுகள் உயிர்புடன் ஒற்றுமையாக முன்நோக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இருந்திராது.
அவர் தந்தை செல்வாவின் அகிம்சைப்போராட்ட அரசியலையும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்ட அரசியலையும் நேசித்து இருந்தார் அவருடை தொலைக்காட்சி் நேர்காணல்களில் எல்லாம் அவரைடைய கருத்துகள் எல்லாம் தமிழ்தேசிய அரசியலின் பலத்தை நோக்கியதாகவே இருந்தது.

அவருடைய துணிச்சலான, நேர்மையான, உண்மையான, பற்றுறிதியான கருத்துக்களை பொறுத்துக்கொள்ளாத இனப்படுகொலையாளர்களே அவருடைய உயிரை குடித்தனர்.
அவர் எம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய நேர்மையான தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை அவருடைய அன்பு மனைவி, மற்றும் பிள்ளைகள், மருமகன் முன்கொண்டு செல்வது வடகிழக்கு தமிழ்த்தேசிய அரசியலுக்கு பக்கபலமாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணத்திலிருந்து இருந்து பெற வேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.

மாமனிதர் ரவிராஜ் அவர்களிடம் நாம் கண்ட துணிச்சலையோ இதயசுத்தியான நடத்தையையோ நேர்மையையோ எந்த தமிழ்தேசியகட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடமோ, அதன் தலைவர்களிடமோ நாம் எதிர்பார்க்கமுடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் இன்று இருந்திருந்தால் 17, வது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு எந்த இடையூறுகள், குத்து வெட்டுகள் இன்றி தலைவர் தெரிவு வாக்கெடுப்பு இன்றி அவரே தலைவராக பேராதரவுடன் தெரிவாகி இருப்பார்.

இன்று தமிழரசுக்கட்சியை நீதிமன்றில் நிறுத்திய நிலைமை அவர் இருந்திருப்பின் ஏற்பட்டிருக்காது. தமிழ்தேசிய அரசியல் செயற்பாடுகள் உயிர்புடன் ஒற்றுமையாக முன்நோக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இருந்திராது.
அவர் தந்தை செல்வாவின் அகிம்சைப்போராட்ட அரசியலையும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்ட அரசியலையும் நேசித்து இருந்தார் அவருடை தொலைக்காட்சி் நேர்காணல்களில் எல்லாம் அவரைடைய கருத்துகள் எல்லாம் தமிழ்தேசிய அரசியலின் பலத்தை நோக்கியதாகவே இருந்தது.

அவருடைய துணிச்சலான, நேர்மையான, உண்மையான, பற்றுறிதியான கருத்துக்களை பொறுத்துக்கொள்ளாத இனப்படுகொலையாளர்களே அவருடைய உயிரை குடித்தனர்.
அவர் எம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய நேர்மையான தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை அவருடைய அன்பு மனைவி, மற்றும் பிள்ளைகள், மருமகன் முன்கொண்டு செல்வது வடகிழக்கு தமிழ்த்தேசிய அரசியலுக்கு பக்கபலமாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

-பா.அரியநேத்திரன்