அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று (05) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

2019 ம் ஆண்டு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஜெகதீஸன் பதவி உயர்வு பெற்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

2001ம் ஆண்டு மத்திய அரசினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவாகி பயிற்சியின் பின்னர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உதவி பிரதேச செயலாளராக தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் சிறிது காலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக கடைமையாற்றி ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றிருந்ததுடன் அதன் பின்னர் காரைதீவு பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி இருந்தார்.

பெரியநீலாவணை, வேதநாயகம் சுகிர்தமலர் தம்பதிகளின் புதல்வரான ஜெகதீசன் தனது ஆரம்பக்கல்வியை பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திலும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். கிழக்கு பல்கலைக் கழகத்தின் கணிதப் பட்டதாரியான இவர் மதுரை காமராஜர் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பொது நிருவாக முதுமானிப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளதுடன் இலங்கை நிர்வாக சேவையின் அதிசிறப்பு தரத்தில் உள்ள அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.