கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உரிமைக்கான 50 வது நாள் மாபெரும் போராட்டம்-  

((கனகராசா சரவணன்)

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக சேவைகள் செயற்பாட்டிற்கு எதிரான அடக்கு முறைகளும் அத்து மீறல்களை கண்டித்து பிரதேச செயலகத்தின் முன் இடம்பெற்றுவரும் போராட்டத்தின் 50 நாளை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உரிமைக்கான போராட்டம்  கடந்த மார்ச் மாதம் பிரதேச செயலகத்தின் முன்னால் 25 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் 50 வது நாளாக இடம்பெற்றுவருகின்றது

இந்த 50 வது நாளை நோக்கிய போராட்டத்தையிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போராட்ட இடத்தில் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழ் அரசியல் வாதிகளே ஏன் இன்னும் மௌனம், ஒரு அரசியல்வாதியை மகிழ்ச்சிபடுத்துவதற்காக 40 ஆயிரம் பொதுமக்களை துன்புறுத்துவது நியாயமா?,

பிரதேச செயலகத்துக்கு மலசல கூடம் கூட திருத்துவதற்கு கூட நிதிவழங்கப்படுவதில்லை, பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக மாற்றுவதை உடன் நிறுத்து, அரசியல் வாதிகளின் சூழ்சிகளில் அகப்படவேண்டாம், அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம், எமது வளங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது, அரச நிதி பங்கீட்டில் புறக்கணிகப்பட்டு வருகின்றோம்.

எமது பிரதேச செயலகம் எமக்கு வேண்டும் என் சுலோகங்கள் ஏந்தியவாறு கறுப்பு கொடிகள் பொம்மைகள் ஏந்தியவாறு  கோஷங்கள் எழுப்பியவாறு.  அங்கிருந்து கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடாக கல்முனை தரவை ஸ்ரீ சித்தி விநாயகர்  பிள்ளையார்  கோவில் வரை சென்று அங்கிருந்து மீண்டும் கல்முனை நகரை வந்தடைந்து அதனூடாக பிரதேச செயலகத்தை வந்தடைந்து பகல் ஒரு மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபின்னர் ஆர்பாடகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.