கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை…
(பா.உ – த.கலையரசன்)

கிழக்கு ஆளுநர் தொடர்பில் அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். பொத்துவில் கனகர் கிராமம் தொடர்பில் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். அது அங்கிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்களுக்குரிய காணி அந்த மக்களுக்கே அந்தக் காணிகள் வழங்கப்படும் என்பதில் நானும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் கல்முனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணசபையைப் பொறுப்பெடுத்து முன்னெடுத்து வருகின்ற விடயங்கள் அனைவரும் சந்தோசப்படுகின்ற விடயங்கள். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் பல காலமாகத் தீர்க்கப்படாது இருந்து பல பிரச்சனைகளுக்கு அவர் மூலமாகத் தீர்வினைக் கண்டிருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எந்நேரமும் அவரையோ அவரது செயலாளரையோ தொடர்பு கொண்டு எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.

நான் நீண்டகாலமாக மாகாணசபையில் இருந்திருக்கின்றேன் ஆனால் தற்போதிருக்கின்ற ஆளுநர் அவர்களின் செயற்பாடுகள் மிகவும் போற்றக்கூடியது. கிழக்கு மாகாணத்திலே வாழுகின்ற மூன்று இன மக்களையும் சமமாகப் பார்த்து இந்த மாகாணத்திலே அவர் தனது சேவையை முன்னெடுக்கின்றார். அதுமாத்திரமல்லாது இன்று அம்பாறை மாவட்டத்தில் நமது மக்கள் நீண்டகாலமாகப் போராட்டங்களை நடத்தி பல ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளை அணுகிய போதும் கூட தீர்வுகள் கிடைக்காத போது கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக பொத்துவில் கனகர் கிராமத்தை அந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் 2600 ஏக்கர் காணியினை வன இலாகாவிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதற்காக எமது ஜனாதிபதிக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் விசேடமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக கனகர் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி இதுவரையும் குடியமர்த்தப்படாத நிலைமை இருந்தது ஆனால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அந்த மக்களை அங்கு குடியமர்த்தியிருக்கின்றோம். தற்போது 73 குடும்பங்களுக்கு அங்கு ஒரு ஏக்கர் இருபது பேர்ச்சஸ் காணி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நாங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். நாங்கள் இந்த நாட்டின் எதிரணியாக இருந்தாலும், எங்களுடைய கருத்துக்களையும் கேட்டு செயற்படும் ஆளுநராக இவர் இருக்கின்றார்.

இவ்வாறு அவரின் செயற்பாடுகள் இருக்கின்ற போது ஒரு சில தனிநபர்கள் அவருக்கெதிராக மிக மோசமாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். பொத்துவில் கனகர் கிராம காணி தொடர்பில் நான் 2012ம் ஆண்டில் இருந்து நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று செயற்பட்டுக் கொண்டிருந்தோம். கிழக்கு மாகாண ஆளுநர், எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், சகோதர பாராளுமன்ற உறுப்பினர் எல்லோருமாக இணைந்து அக்காணிகளை அந்த மக்களுக்கு நாங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தும் எங்களுக்கும் சேறுபூசும் செயற்பாடுகளே இடம்பெற்றன.

அதே போன்றே தற்போது ஆளுநருக்கும் அவ்வாறு சேறு பூசும் செயற்பாட்டையும் அவர் முன்னெடுத்திருக்கின்றார்கள். அவ்வாறு செயற்படுபவர்கள் ஒரு மனநோயாளிகளாகவே இருக்க வேண்டும். இவ்வாறான ஒருசிலர் இவ்வாறு செயற்படுகின்ற போது எமது மக்களுக்;குக் கிடைக்க வேண்டிய பலாபலன்கள் இல்லாமல் போகும் வாய்ப்புகளே இருக்கின்றது. இப்படியாக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள்.

பொத்துவில் காணி தெடர்பில் நாங்கள் எந்தவித இனவாதமும் பார்க்கவில்லை. அங்கு தமிழர்களின் காணிகளில் முஸ்லீம்களை குடியமர்த்தப் போகின்றார்கள். அதற்கு கலையரசனும் துணைபோகின்றார் என்றவாறான பொய்யான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். அது அங்கிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறிய மக்களுக்குரிய காணி அந்த மக்களுக்கே அந்தக் காணிகள் வழங்கப்படும் என்பதில் நானும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் உறுதியாக இருக்கின்றோம்.

அது மட்டுமல்லாது அந்த கனகர் கிராமம் தொடர்பில் இன்னும் முன்மொழிவுகளை அவர் என்னிடம் கோரியுள்ளார். இந்த விடயத்தில் நான் பல ஆளுநர்களைத் தொடர்பு கொண்டிருக்;கின்றேன், அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் குறைவு. ஆனால் தற்போதைய ஆளுநரின் செயற்பாடுகள் இந்த விடயத்தில் மிகச் சிறப்பாக இருந்தன.

இவ்;வாறன நல்ல சிந்தனை கொண்ட எமது மக்களின் தேவைளை பூர்த்தி செய்யக் கூடியவர்களை நாம் வலுப்படுத்த வேண்டும். என்பதுடன் கிழக்கு மாகாணம் சிறப்புற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தற்போதும் எமது அம்பாறை மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தல் விடயங்கள் பற்றி பேசுகின்ற போது அவர் எங்களை ஊக்கப்படுத்தக் கூடியவாறு எங்களை அணுகிக் கெண்டிருக்கின்றார். அவரின் செயற்பாடுகள் மூவின மக்களையும் திருப்திப் படுத்தக் கூடியவாறு இருக்கின்றது. அவரை நாங்கள் மென்மேலும் ஊக்கப்படுத்தி எமது மாகாணத்தை வளம் மிக்க மாகாணமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது என்று தெரிவித்தார்.