இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வுமில்லை. கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை. இன்னுமொரு பிரதேச செயலகத்தின் கீழ் அடிமைகளாக இருந்து செயற்பட வேண்டிய நிலையில் அதிகாரிகள். பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து இந்த நாட்டில் திட்டமிட்டு ஒரு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் அநீதிகளை இனங்கண்டு, அவற்றை விசாரணை செய்து அந்த மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலே எமது பிரதேசம் சார்ந்த விடயங்களைப் பேசலாம் என்று நினைக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேசத்திலே கடந்த 25ம் திகதியில் இருந்து சுழற்சி முறையிலான உண்ணவிரதப் போராட்டத்தினை அந்த மக்க்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். சுமார் 33 வருடங்களாக இயங்குகின்ற அந்தப் பிரதேச செயலகத்தைப் புறந்தள்ளி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடாத்தி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கல்முனை வடக்குப் பிரதேச செயலத்திற்கு மாத்திரம் அந்த நிதி இல்லை என்ற காரணமும், தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற அந்த பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதுடன் அந்த பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை முடக்குகின்றதுமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அந்த மக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகமானது 39000 மக்களையும், 29 கிராம சேவையாளர் பிரிவுகளையும், 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான தனியான ஒரு பிரதேச செயலக அலகாக 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது.

பின்னர் 93/600/034 இலக்க 1993.03.17ம் திகதிய அதேபோன்று 93/600/034 (1) இலக்க 1993.03.31ம் திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 1993.07.09ம் திகதிய அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை என்பனவற்றின் அடிப்படையில் 1993.07.28ம் திகதிய அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தனியான ஒரு பிரதேச செயலகமாக 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சேவை செய்து வருகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழர்கள் இருந்தாலும் அதில் 5 பிரதேச செயலளர் பிரிவுகளிலேயே பெரும்பான்மையாக தமிழ் பிரதேச செயலாளர்கள் நிருவாகத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழர்களுக்கான பிரதேச செயலாளர் பிரிவுகளில் மிகவும் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடுகளே மேற்கொள்ளப்படுகின்றன.

அதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு எவ்வித நிதியும் இல்லை, அபிவிருத்தி கூட்டமும் நடைபெறவில்லை. இது ஒரு பாரிய புறக்கணிப்பு.

கடந்த காலங்களிலே எமது தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிப்புற்றது மாத்திரமல்லாமல் இந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திலே இருந்த பாரம்பரிய அரச காணிகள், அரச சொத்துக்கள், சிறு நீர்நிலைகள் முஸ்லீம் அரசியல்வாதிகள், கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் ஆகியோரின் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் மூலம் கபளிகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த விடயங்களை நாங்கள் பல தடவைகள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம். ஜனாதிபதியைச் சந்தித்த போதும் கூட எழுத்துமூல ஆவணம் நான் சமர்ப்பித்திருக்கின்றேன். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

இந்த விடயங்களையெல்லாம் கண்டித்தே எமது மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தமிழர்களுக்கு இந்த நாட்டிலே உரிமை சார்ந்த ஒரு தீர்வுமில்லை. கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை. இன்னுமொரு பிரதேச செயலகத்தின் கீழ் அடிமைகளாக இருந்து நிருவாகம் செய்ய வேண்டிய நிலையிலேயே அங்கு அதிகாரிகளும் இருக்கின்றார்கள்.

எனவே தயவு செய்து பொது நிருவாக அமைச்சு இதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் குறிப்பிட்ட சில காலப்பகுதியில் தான் அதிகளவிலான அதிகார பறிப்புக்குள் உள்ளாகிக் கொண்டிருக்கின்றது.

இருந்த காணி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்காளர் இல்லாமையால் அங்கிருக்கும் உத்தியோகத்தர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் நிருவாகிகள் மாத்திரமல்ல அங்கு வாழும் தமிழ் மக்களும் இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தயவு செய்து பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து அந்த மக்களின் உள்ளக் குழுறல்களை, இந்த நாட்டில் திட்டமிட்டு ஒரு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் அநீதிகளை இனங்கண்டு, அவற்றை விசாரணை செய்து அந்த மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

You missed